மறுவாக்குப் பதிவுக்கு மீண்டும் வாக்காளர் சீட்டு அச்சடித்து விநியோகம்
By DIN | Published On : 15th May 2019 07:27 AM | Last Updated : 15th May 2019 07:27 AM | அ+அ அ- |

ஈரோடு தொகுதி, திருமங்கலம் வாக்குச் சாவடியில் மறுவாக்குப் பதிவுக்காக மீண்டும் வாக்காளர் சீட்டு (பூத் ஸ்லிப்) அச்சடித்து விநியோகம் செய்யப்படும் என தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழகத்தில் ஏப்ரல் 18 ஆம் தேதி நடந்த வாக்குப் பதிவின்போது தவறு நடந்ததாக கூறப்பட்ட 13 வாக்குச் சாவடிகளில் வருகிற மே 19 ஆம் தேதி மறுவாக்குப் பதிவு நடைபெறுகிறது. அதையொட்டி ஈரோடு மக்களவைத் தொகுதி காங்கயம் சட்டப் பேரவை தொகுதியில் உள்ள திருமங்கலம் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில்
அமைக்கப்பட்ட வாக்குச் சாவடியில் மறுவாக்குப் பதிவு நடக்கிறது. இதற்கான முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வருகின்றன.
மறுவாக்குப் பதிவு நடக்கும் வாக்குச் சாவடிக்கு உள்பட்ட பகுதிகளில் உள்ள வாக்காளர்களுக்கு மீண்டும் வாக்காளர் சீட்டு (பூத் ஸ்லிப்) வழங்கப்படவுள்ளது. இதற்காக வாக்காளர் சீட்டுகள் அச்சடிக்கப்பட உள்ளன. வாக்குப் பதிவு நடப்பதற்கு 2 நாள்களுக்கு முன்பு வாக்காளர் சீட்டு விநியோகம் செய்யப்படும் என தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.