மழையளவு விவரங்களை அறிந்துகொள்ள செல்லிடப்பேசி செயலி அறிமுகம்
By DIN | Published On : 15th May 2019 07:26 AM | Last Updated : 15th May 2019 09:13 AM | அ+அ அ- |

மழையளவு விவரங்களை அறிந்துகொள்ள செல்லிடப்பேசி செயலியை தமிழக அரசு அறிமுகம் செய்துள்ளது. இந்த செயலியை ஈரோடு மாவட்ட மக்கள் பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
இயற்கை பேரிடர் காலங்களில் பேரிடர் விழிப்புணர்வு குறித்த அறிக்கைகள், வானிலை அறிக்கை, மழையளவு விவரங்களை தெரிந்துகொள்ள வசதியாக டிஎன்ஸ்மார்ட் (TNSMART) என்னும் செல்லிடப்பேசி செயலி தமிழக அரசின் பேரிடர் மேலாண்மை துறையால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதனை பொதுமக்கள் செல்லிடப்பேசியில் இருந்து இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இச்செயலியின் மூலம் சுனாமி, பூகம்பம், வெள்ளம், அதிக வெப்பம், புயல் மற்றும் பேரிடர் காலங்களில் முன்னெச்சரிக்கை குறுஞ்செய்தி பதிவு செய்த செல்லிடப்பேசி எண்ணுக்கு அனுப்பப்படும்.
இச்செயலியை அனைத்து துறை அரசு அலுவலர்கள், கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்கள், தொண்டு நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் தங்களது செல்லிடப்பேசியில் பதிவிறக்கம் செய்து பயன்பெறலாம். மேலும் இச்செயலியின் மூலம் பொதுமக்கள் தங்கள் வாழ்விடங்களில் ஏற்படும் இயற்கை பேரிடர் பாதிப்புகளை செல்லிடப்பேசியிலிருந்து புகைப்படம் எடுத்து பதிவேற்றம் செய்ய இயலும். எனவே, ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைவரும் தங்களது செல்லிடப்பேசியில் இச்செயலியினை பதிவிறக்கம் செய்து பயன்பெறலாம் எனத் தெரிவித்துள்ளார்.