கோபிசெட்டிபாளையம் பகுதியில் பலத்த மழை, சூறாவளிக் காற்றில் வாழைகள் சேதம்
By DIN | Published On : 19th May 2019 05:42 AM | Last Updated : 19th May 2019 05:42 AM | அ+அ அ- |

கோபிசெட்டிபாளையம் பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு பெய்த கனமழை, சூறாவளிக் காற்றில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சாய்ந்து விழுந்தன.
கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள காசிபாளையம் பேரூராட்சிக்கு உள்பட்ட காந்திநகர், கணபதிபாளையம், இந்திரா நகர், வன்னிமரத்துக்காடு உள்ளிட்ட பல பகுதிகளில் விவசாயிகள் பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் செவ்வாழை, கதளி , நேந்திரம், மொந்தன் உள்ளிட்ட பல ரகங்களில் வாழை சாகுபடி செய்துள்ளனர்.
இந்த வாழைகள் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்ததால், இயற்கை சீற்றங்களிலிருந்து பாதுகாக்க டேப்கட்டியும், மூங்கில்களில் முட்டுக் கொடுத்தும் பாதுகாத்து வந்தனர்.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை இரவு காசிபாளையம் பகுதியில் பெய்த கனமழை, சூறாவளிக் காற்றில் 10 ஆயிரத்துக்கும் அதிகமான வாழை மரங்கள் முறிந்து விழுந்தன.
இதனால் வாழை சாகுபடி செய்திருந்த விவசாயிகள் பெரிதும் கவலையடைந்துள்ளனர். மேலும் தற்போது நிலவி வரும் வறட்சிக்கு முன்பே வாழைகளை அறுவடை செய்து வங்கிகளில் பெற்ற கடன்களை அடைத்து விடலாம் எனவும், குழந்தைகளுக்குப் பள்ளி, கல்லூரி கட்டணம் செலுத்த இந்த வாழைகளை நம்பியிருந்ததாகவும், தற்போது அனைத்தும் சூறாவளிக் காற்றில் சேதமடைந்துள்ளதால் பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
ஆண்டுதோறும் இயற்கை சீற்றங்களினால் அல்லது வறட்சியினால் சாகுபடி செய்யப்படும் பயிர்கள் சேதமடைந்து வருவதாகவும், இதனால் விவசாயிகளுக்கு தனிநபர் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தை அரசு அமல்படுத்த வேண்டும். தற்போது சேதமடைந்துள்ள வாழைகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் காசிபாளையம் பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு பெய்த கனமழை, சூறாவளிக் காற்றில் 50-க்கும் மேற்பட்ட தென்னை மரங்களும், கரும்பு பயிர்களும் சேதமடைந்துள்ளதாக இப்பகுதி விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.