பள்ளி மாணவர்களுக்கு பாடப் புத்தகங்கள், நோட்டுகள் 70% வருகை
By DIN | Published On : 19th May 2019 07:12 AM | Last Updated : 19th May 2019 07:12 AM | அ+அ அ- |

ஈரோடு மாவட்டத்தில் வரும் கல்வியாண்டில் 1ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை பயிலும் மாணவ - மாணவிகளுக்கு பாடப் புத்தகங்கள், நோட்டுகள் தற்போது 70 சதவீதம் வந்துள்ளன.
இம்மாத இறுதிக்குள் இவை அந்தந்தப் பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்படும் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரா.பாலமுரளி தெரிவித்தார்.
ஈரோடு மாவட்டத்தில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் ஜூன் 3ஆம் தேதி திறக்கப்பட உள்ளன. அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு பாட புத்தகம், நோட்டு, சீருடைகள் வழங்கப்பட உள்ளன. இதற்காக பாடப்புத்தகங்கள், நோட்டுகள் ஈரோடு ரயில்வே காலனி மாநகராட்சி மேல்நிலைப்பள்ளிக்கு வரத் தொடங்கியுள்ளன.
இதுகுறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ரா.பாலமுரளி கூறியதாவது:
மாவட்டத்தில் 1.70 லட்சம் மாணவர்களுக்கு பாட புத்தகங்கள், நோட்டுகள் வழங்கப்பட உள்ளன. இந்த ஆண்டு 7, 8, 10, 12ஆம் வகுப்பு பாடப் பிரிவுகளுக்கு புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
9ஆம் வகுப்பு தமிழ், ஆங்கிலம் பாடத்துக்கு மூன்று தொகுப்புகளுக்கு பதிலாக ஒரே தொகுப்பு பாட புத்தகமாக வந்துள்ளது. பாடப் புத்தகங்கள், நோட்டுகள் தற்போது வரை 70 சதவீதம் வந்துள்ளன.
அனைத்துப் பாடப் புத்தகம், நோட்டுகள் வந்தவுடன் இம்மாத இறுதிக்குள் மாவட்டத்தில் உள்ள அந்தந்தப் பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்படும் என்றார்.