ஈரோட்டில் மின் தடையால் லிப்டில் சிக்கித் தவித்த காவலாளியை ஒன்றரை மணி நேரம் போராடி, தீயணைப்புத் துறையினர் பத்திரமாக மீட்டனர்.
ஈரோடு பேருந்து நிலையம் எதிரே சத்தி சாலையில் தனியார் வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கிக் கட்டடம் மூன்றடுக்கு கொண்டது. அதில் வாடிக்கையாளர்களுக்கும், பொதுமக்களுக்கும் வசதியாக லிப்ட் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் ஈரோடு மாநகர் முழுவதும் சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை மின் தடை ஏற்பட்டது.
மேற்கண்ட தனியார் வங்கியில், ஈரோடு குமலன்குட்டை செல்வம் நகரைச் சேர்ந்த பழனிசாமி (65) காவலாளியாக பணியாற்றி வருகிறார். இவர் வங்கி திறப்பதற்கு முன்பாக மூன்று தளத்திலும் சோதனை செய்து விட்டு லிப்ட் வழியாக இறங்குவாராம்.
அதேபோல் சனிக்கிழமை காலை மூன்று தளத்துக்கும் சென்று விட்டு சுமார் காலை 9 மணியளவில் லிப்ட்டில் முதல் தளத்தை நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது மின் தடை ஏற்பட்டதால் லிப்டிலேயே பழனிசாமி சிக்கிக் கொண்டார். அவரிடம் செல்லிடப்பேசி இல்லாததால் அவசர உதவிக்கு யாரையும் அழைக்க முடியவில்லை. இதனால் உள்ளே இருந்தபடி கூச்சலிட்டு கொண்டிருந்தார். ஆனால் அப்போது பணியாளர்கள் யாரும் வராததால் நீண்டநேரமாக லிப்டில் சிக்கித் தவித்தார்.
காலை சுமார் 9.50 மணியளவில் பணியாளர்கள் லிப்டில் பழனிசாமி சிக்கியிருப்பதை அறிந்து, ஈரோடு தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் சுமார் அரைமணி நேரம் போராடி, அவர்களிடம் இருந்த லிப்டின் அவசர கால வழி சாவியை பயன்படுத்தி பத்திரமாக மீட்டனர். இச்சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.