"லேடீஸ் ஃபர்ஸ்ட்' திட்டத்தில் 8 நாள்களில் 150 அழைப்புகள்: எஸ்.பி. தகவல்
By DIN | Published On : 19th May 2019 07:14 AM | Last Updated : 19th May 2019 07:14 AM | அ+அ அ- |

ஈரோடு மாவட்டத்தில் பெண்களுக்கான பிரச்னைகள் குறித்து காவல் துறையில் புகார் தெரிவிக்கும் "லேடீஸ் ஃபர்ஸ்ட்' திட்டத்தில் 8 நாள்களில் 150 அழைப்புகள் வந்துள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.சக்திகணேசன் தெரிவித்தார்.
ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளராக எஸ்.சக்திகணேசன் பொறுப்பேற்றது முதல் பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் எடுத்து வருகிறார். முதியோர்களுக்கு உதவும் வகையில் மாவட்ட காவல்துறை சார்பில் "ஹலோ சீனியர்' திட்டம் கடந்த ஜனவரி முதல் செயல்பட்டு வருகிறது. இதற்காக பிரத்யேகமாக 96558 88100 என்ற செல்லிடப்பேசி எண் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் முதியவர்கள் தங்களுக்கு ஏற்படும் பிரச்னை குறித்து காவல் நிலையம் செல்லாமலேயே செல்லிடப்பேசி மூலம் தொடர்பு கொண்டு தீர்வு பெற்று வருகின்றனர். அதைத் தொடர்ந்து மாவட்டத்தில் பணிபுரியும் பெண் போலீஸாருக்கு வார விடுமுறையை எஸ்.பி. சக்திகணேசன் அறிமுகப்படுத்தினார்.
தற்போது மாவட்டத்தில் பெண்களுக்கு உதவும் வகையில் "லேடீஸ் ஃபர்ஸ்ட்' என்ற திட்டம் கடந்த 11ஆம் தேதி முதல் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக 96552 20100 என்ற செல்லிடப்பேசி எண் ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த 8 நாள்களில் இந்த எண்ணுக்கு 150 அழைப்புகள் வந்துள்ளன.
இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.சக்திகணேசன் கூறியதாவது:
பெண்கள் தங்களுக்கோ, தங்களை சார்ந்தவர்களுக்கோ ஏற்படும் பிரச்னை குறித்து 96552 20100 என்ற செல்லிடப்பேசி எண்ணில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்து வருகின்றனர். அதன்பேரில் போலீஸார் விரைந்து சென்று அவர்களுக்கு தேவையான சட்ட ரீதியான உதவிகளை செய்து வருகின்றனர். இந்த செல்லிடப்பேசி எண் 24 மணி நேரமும் செயல்படும். புகார் அளித்த 24 மணி நேரத்துக்குள் புகார்தாரருக்கு உரிய நிவாரணம் வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்துக்கு பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது.
இந்தத் திட்டம் தொடங்கப்பட்ட 8 நாள்களில் இதுவரை 150 அழைப்புகள் வந்துள்ளன. இதில் 40 அழைப்புகள் இந்த திட்டத்துக்கு நன்றி தெரிவித்து வந்துள்ளன. 90 அழைப்புகளில் பெறப்பட்ட புகார்களுக்கு தீர்வு காணப்பட்டுவிட்டது. மீதமுள்ள 20 அழைப்புகளுக்கான பிரச்னை குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார்.