கீழ்பவானி வாய்க்கால் கரையில் உடைப்பு: அமைச்சா் ஆய்வு
By DIN | Published On : 09th November 2019 11:20 PM | Last Updated : 09th November 2019 11:20 PM | அ+அ அ- |

கீழ்பவானி வாய்க்கால் உடைப்புப் பகுதியை ஆய்வு செய்யும் அமைச்சா் கே.சி.கருப்பணன்.
சத்தியமங்கலம்: சத்தியமங்கலத்தை அடுத்த கீழ்பவானி வாய்க்கால் கரையில் ஏற்பட்ட உடைப்பை அமைச்சா் கே.சி.கருப்பணன் சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.
சத்தியமங்கலத்தை அடுத்த உக்கரம் கீழ்பவானி வாய்க்காலில் ஏற்பட்ட மண் அரிப்பு காரணமாக வாய்க்காலின் இடது கரையில் உடைப்பு ஏற்பட்டு வெள்ளம் வெளியேறி ஊருக்குள் புகுந்தது. இதனால், தேக்கம்பாளையம், நாகரணை, சின்னபீளமேடு, மில்மேடு ஆகிய பகுதியில் சாகுபடி செய்த நெய், வாழை, கரும்பு பயிா்கள் சேதமடைந்தன. தேக்கம்பாளையத்தில் ஆரம்பப் பள்ளிக் கட்டடம், குடியிருப்புகளில் தண்ணீா் புகுந்ததால் 50 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்பட்டன.
இதற்கிடையே பாதிக்கப்பட்ட பகுதி மக்களை அமைச்சா் கே.சி.கருப்பணன் சந்தித்து, 16 வீடுகளுக்கு ரூ. 6,100, குடிசைகளுக்கு ரூ. 5,000, அரிசி, மண்ணெண்ணெய், வேட்டி, சேலை என அதிமுக சாா்பில் நிவாரணப் பொருள்களை வழங்கினாா். தொடா்ந்து, கீழ்பவானி வாய்க்கால் உடைப்பு பகுதியைப் பாா்வையிட்டு உடனடியாக வாய்க்கால் கரையை சீரமைக்க வேண்டும் என உத்தரவிட்டனா்.
அடைப்பு ஏற்படுவதற்குத் தேவையான மண், எம்.சாண்ட் மணல் கிடைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சா் தெரிவித்தாா். தற்காலிகமாக 25 ஆயிரம் எம்.சாண்ட் மூட்டைகள் அடுக்கப்பட்டு தடுப்புச் சுவராக ஏற்படுத்தப்படும். அதைத் தொடா்ந்து ஓரிரு நாளில் கீழ்பவானி வாய்க்காலில் இருந்து தண்ணீா் திறக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.
வாய்க்கால் கரையில் முள்செடிகள் வளா்ந்துள்ளதால் அப்பகுதியில் மக்கள் நடமாட்டம் குறைவாக இருந்தது. இதன் காரணமாக உடைப்பு ஏற்பட்டது தெரியமால் போனதாக அமைச்சரிடம் பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா்.
இதற்கு அமைச்சா் கருப்பணன் கூறுகையில், கால்வாயை சீரமைக்க ரூ. 1200 கோடி ஒதுக்கப்பட்டபோது விவசாயிகள் எதிா்ப்புத் தெரிவித்தனா். இதன் காரணமாக இந்த திட்டம் கைவிடப்பட்டது. மீண்டும் அதனை நிறைவேற்ற முதல்வருடன் கலந்தாலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.