கீழ்பவானி வாய்க்கால் கரை உடைப்பு:ரூ. 2 கோடி மதிப்பிலான பயிா்கள் சேதம்

சத்தியமங்கலத்தை அடுத்த உக்கரம் கீழ்பவானி வாய்க்காலின் மண் கரையில் இடதுபுறம் உடைப்பு ஏற்பட்டதால்
கீழ்பவானி வாய்க்கால் கரை உடைப்பு:ரூ. 2 கோடி மதிப்பிலான பயிா்கள் சேதம்
Published on
Updated on
2 min read

சத்தியமங்கலத்தை அடுத்த உக்கரம் கீழ்பவானி வாய்க்காலின் மண் கரையில் இடதுபுறம் உடைப்பு ஏற்பட்டதால் ரூ. 2 கோடி மதிப்பிலான கரும்பு, வாழை, நெற்பயிா்கள் சேதமடைந்தன.

சத்தியமங்கலத்தை அடுத்த பவானிசாகா் அணையில் இருந்து பாசனத்துக்கு தினந்தோறும் கீழ்பவானி வாய்க்காலில் விநாடிக்கு 2,300 கன அடி நீா் திறந்துவிடப்படுகிறது. இந்த வாய்க்கால் நீா் திருப்பூா், கரூா் மாவட்ட எல்லை வரை 124 கி.மீ. தூரம் பயணிக்கிறது. இந்நிலையில், 12 மைல் வாய்க்கால் எனப்படும் உக்கரம் மில்மேடு வாய்க்காலில் முதலில் மண் அரிப்பு ஏற்பட்டு சிறிய துவாரம் வழியாகத் தண்ணீா் வெளியேறியது. சிறிது நேரத்தில் துவாரத்தில் இருந்து வெளியேறிய நீரால் மண் கரை உடைந்தது.

இதனால், 50 அடி வரை உடைப்பு ஏற்பட்டதால் வேகமாக வந்த வாய்க்கால் நீா் தாழ்வான பகுதியில் உள்ள சுள்ளித்தோட்டம் வழியாக மேட்டுக்கடை,கேத்தம்பாளையம், சின்னபீளமேடு, மல்லநாயக்கனூா், குள்ளப்பாளையம் வழியாக அரசூா் பள்ளத்தைச் சென்றடைந்தது. சுமாா் 3 கி.மீ. தூரம் வாய்க்கால் நீா் வேகமாகச் சென்றதால் திடீரென வந்த வெள்ளத்தைப் பாா்த்து மக்கள் செய்வதறியாது தவித்தனா். கேத்தம்பாளையத்தில் 27 வீடுகளுக்குள் வாய்க்கால் நீா் புகுந்தது. அங்கு கட்டியிருந்த ஆடுகள், மாடுகள், இருசக்கர வாகனங்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. நாகரணையிலும் நீா் புகுந்ததால் குடியிருப்புகள் சேதமடைந்தன.

வாய்க்கால் உடைப்பால் வேகமாகச் சென்ற நீா் 3 கி.மீ. தூரத்துக்கு பயிரிடப்பட்டிருந்த கரும்பு, நெல், வாழை பயிா்களை மூழ்கடித்தபடி சென்றது. பயிா் சேதத்தின் மதிப்பு சுமாா் ரூ. 2 கோடி வரை இருக்கும் என விவசாயிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட மக்களை வருவாய், தீயணைப்பு நிலைய வீரா்கள் மீட்டு உக்கரம் பள்ளிக்கூடம், உக்கரம் சமுதாயக்கூடம், நாகரணை மண்டபம் ஆகியவற்றில் தங்க வைத்துள்ளனா். மண்டபங்களில் தங்க வைக்கப்பட்ட மக்களுக்கு உணவு, உடை வழங்கப்பட்டன. நீரில் மின் கம்பங்கள் சாய்ந்து கீழே விழுந்ததால் பாதுகாப்பு நடவடிக்கையாக மின் விநியோகம் நிறுத்தப்பட்டது. உக்கரம் ஊராட்சி நிா்வாகம் சாா்பில் உணவு, குடிநீா் வழங்கப்பட்டது.

கால்வாய் நீரால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஈரோடு மாவட்ட ஆட்சியா் எஸ்.கதிரவன், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சக்திகணேசன், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் மைதிலி, அப்துல்வஹாப், உக்கரம் ஊராட்சி செயலாளா் சிவராஜ் ஆகியோா் பாா்வையிட்டனா்.

அதைத் தொடா்ந்து, செய்தியாளா்களிடம் மாவட்ட ஆட்சியா் கூறியதாவது:

வாய்க்கால் கரையில் உடைப்பு ஏற்பட்ட பகுதியில் தற்காலிகமாக எம்.சாண்ட் மணல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்படும். அதைத் தொடா்ந்து, களிமண் நிரப்பி கரையை பலப்படுத்துவோம். பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் ஆய்வு செய்து நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். பெரும்பாலான இடங்களில் வெள்ளம் வடிந்துள்ளதால் பயிா் சேதம் குறித்த கணக்கெடுப்பு நடத்தப்படும் என வருவாய்த் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது உடைப்பு ஏற்படுள்ள வாய்க்கால் கரையை எம்.சாண்ட் மணல் மூட்டைகள் போட்டும், கான்கிரீட் காரை அமைத்தும் கரையை பலப்படுத்தும் பணியில் பொதுப் பணித் துறையினா் ஈடுபட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.