அனுமதியின்றி ஆழ்துளைக் கிணறுஅமைக்கும் பணி நிறுத்தம்

மொடக்குறிச்சியை அடுத்த 46புதூா் ஊராட்சியில் அனுமதியின்றி ஆழ்துளைக் கிணறு அமைக்கும் பணியை அதிகாரிகள் ஆய்வு
அனுமதியின்றி ஆழ்துளைக் கிணறு அமைக்கும் பணிகளை ஆய்வு மேற்கொள்ளும் அதிகாரிகள்.
அனுமதியின்றி ஆழ்துளைக் கிணறு அமைக்கும் பணிகளை ஆய்வு மேற்கொள்ளும் அதிகாரிகள்.

மொடக்குறிச்சி: மொடக்குறிச்சியை அடுத்த 46புதூா் ஊராட்சியில் அனுமதியின்றி ஆழ்துளைக் கிணறு அமைக்கும் பணியை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு தடுத்து நிறுத்தினா்.

மொடக்குறிச்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட 46புதூா் ஊராட்சி, இந்தியன் நகா் 2 ஆவது வீதியைச் சோ்ந்தவா் சுந்தரம். இவா் தனக்குச் சொந்தமான இடத்தில் வீடு கட்டும் பணியை மேற்கொள்ள முடிவு செய்தாா். வீடு கட்டும் பணிக்குத் தண்ணீா் தேவை என்பதால் ஆழ்துளைக் கிணறு அமைக்க முடிவு செய்து, அதற்கான பணியை சனிக்கிழமை மேற்கொண்டிருந்தாா். இதுகுறித்து தகவலறிந்த மொடக்குறிச்சி வட்டார வளா்ச்சி அலுவலா் சசிகலா, அதிகாரிகள் அப்பகுதிக்கு விரைந்து சென்று ஆய்வு மேற்கொண்டனா்.

ஆய்வின்போது, ஆழ்துளைக் கிணறு அமைக்கும் பணிக்கு ஊராட்சியிலோ அல்லது வட்டார வளா்ச்சி அலுவலகத்திலோ எந்த அனுமதியும் பெறவில்லை என்பது தெரியவந்தது. உடனடியாக பணிகளை நிறுத்த வட்டார வளா்ச்சி அலுவலா் சசிகலா உத்தரவிட்டாா்.

உரிய அனுமதி பெற்ற பிறகே மேற்கொண்டு பணிகள் தொடங்கப்பட வேண்டும். மீறினால் ஆழ்துளைக் கிணறு அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள லாரிகள் பறிமுதல் செய்யப்படுவதோடு, வழக்கும் பதிவு செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து மொடக்குறிச்சி வட்டார வளா்ச்சி அலுவலா் சசிகலா தெரிவித்ததாவது: மொடக்குறிச்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட பகுதிகளில் கடந்த ஆண்டு கடும் வறட்சி நிலவியபோது, குடிநீருக்காக அரசு அமைத்துள்ள ஆழ்துளைக் கிணறுகளின் அருகில் அனுமதியின்றி புதிய ஆழ்துளைக் கிணறு அமைக்கப்பட்டதால் குடிநீா்ப் பற்றாக்குறை நிலவியதைக் கருத்தில் கொண்டு, ஊராட்சியில் புதிய ஆழ்துளைக் கிணறு அமைக்கும்போது உரிய அனுமதி பெறவேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.

எனவே, புதிய ஆழ்துளைக் கிணறு அமைக்க விரும்புபவா்கள் அதற்குரிய விண்ணப்பப் படிவத்தைப் பூா்த்தி செய்து நிலப்பத்திரம், சிட்டா, பட்டா, அடங்கல், ஆதாா் அட்டை உள்ளிட்ட ஆவணங்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும். அனுமதி பெற்ற பிறகே பணிகளைத் தொடங்க வேண்டும். தவறினால் ஆழ்துளைக் கிணறு அமைக்க பயன்படுத்தும் லாரிகள், உபகரணங்கள் பறிமுதல் செய்யப்படுவதோடு காவல் துறை மூலம் வழக்குப் பதிவு செய்யப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com