சித்தோடு காந்தி நகரில் ரூ. 7 லட்சத்தில் தண்ணீர் தொட்டி திறப்பு
By DIN | Published On : 11th September 2019 06:48 AM | Last Updated : 11th September 2019 06:48 AM | அ+அ அ- |

சித்தோட்டை அடுத்த காந்தி நகரில் ரூ. 7 லட்சம் மதிப்பில் ஆழ்குழாய் கிணறு அமைத்து தொட்டி மூலம் தண்ணீர் விநியோகம் செய்யும் பணி திங்கள்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது.
ஈரோடு மாநகராட்சி மண்டலம் 1, வார்டு 1, காந்தி நகரில் நிலவும் தண்ணீர் தட்டுப்பாட்டைப் போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து, மாநில பேரிடர் மேலாண்மை நிதி 2019-20 திட்டத்தின் கீழ் ஆழ்குழாய் கிணறு, மின்மோட்டார் வைத்து, குடிநீர்த் தொட்டி மூலம் தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
குடிநீர்த் தொட்டி திறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்று சட்டப் பேரவை உறுப்பினர்கள் கே.வி.இராமலிங்கம் (ஈரோடு மேற்கு), கே.எஸ்.தென்னரசு (ஈரோடு கிழக்கு) ஆகியோர் குழாயைத் திறந்து வைத்தனர்.
இதில், மாநகராட்சி ஆணையர் இளங்கோவன், மாநகராட்சி முன்னாள் துணை மேயர் கே.சி.பழனிசாமி, கூட்டுறவுச் சங்கத் தலைவர் ஏ.கணேஷ்குமார், நிர்வாகிகள் பழனிசாமி, தாமோதரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.