சுமை தூக்கும் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
By DIN | Published On : 11th September 2019 06:47 AM | Last Updated : 11th September 2019 06:47 AM | அ+அ அ- |

சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு தனி நல வாரியம் அமைக்கக் கோரி ஈரோடு மாவட்ட ஏஐடியூசி சுமை தூக்கும் தொழிலாளர் சங்கம் சார்பில் ஈரோட்டில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஈரோடு வீரப்பன்சத்திரத்தில் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு சங்க ஒருங்கிணைப்பாளர் கே.சந்திரசேகர் தலைமை வகித்தார். தமிழ்நாடு ஏஐடியூசி சுமை தூக்கும் தொழிலாளர் சம்மேளன பொதுச் செயலாளர் எஸ்.சின்னசாமி பேசினார்.
சுமை தூக்கும் தொழிலாளர்களுக்குத் தனி நல வாரியம் அமைக்க வேண்டும். ஜி.எஸ்.டி.யில் 1 சதவீதம் நிதியை சுமை தூக்கும் தொழிலாளர் மேம்பாட்டுக்கு ஒதுக்க வேண்டும். அரசே ஓய்வறைகள் கட்டிக் கொடுக்க வேண்டும். பி.எப், இஎஸ்ஐ திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும்.
பணியிடங்களில் விபத்தில் இறப்பவர் குடும்பத்துக்கு ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். 55 வயதானவர்களுக்கு மாதம் ரூ. 6,000 ஓய்வூதியம், சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு மாதம் ரூ. 20,000 க்கு குறைவில்லாத ஊதியம், வீடு இல்லாதவர்களுக்கு வீடு கட்டி கொடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.