மழைநீரை சுத்திகரிப்பு செய்து குடிநீராக பயன்படுத்தும் கட்டமைப்பு: ஆட்சியர் ஆய்வு
By DIN | Published On : 11th September 2019 06:46 AM | Last Updated : 11th September 2019 06:46 AM | அ+அ அ- |

மாநகராட்சி அலுவலகத்தில் மழை நீரை சுத்திகரிப்பு செய்து குடிநீராகப் பயன்படுத்துவதற்காக அமைக்கப்பட்டுள்ள கட்டமைப்பை ஆட்சியர் பார்வையிட்டார்.
பருவ மழை துவங்க உள்ளதால் ஈரோடு மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் உள்ள வீடுகளில் மழைநீர் சேமிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது. மாநகராட்சிப் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு, கான்கீரிட் வீடு, ஓடு வீடுகளில் எவ்வாறு மழை நீர் சேமிக்க வேண்டும் என மாதிரிகள் அமைத்து விளக்கப்பட்டு வருகின்றன.
இதனிடையே ஈரோடு மாநகராட்சி வளாகத்தில் உள்ள பழைய கட்டடத்தின் மொட்டை மாடியில் சேகரமாகும் மழை நீரை குழாய் வழியாகக் கொண்டு வந்து அவற்றை சுத்திகரித்து 2,000 லிட்டர் கொண்ட சின்டெக்ஸ் தொட்டியில் நிரப்பி குடிநீராகப் பயன்படுத்த மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
அதேபோல், மாநகராட்சியின் புதிய கட்டடத்தின் மொட்டை மாடியில் சேகரமாகும் மழை நீரை சேமிக்கும் வகையில் தரைப் பகுதியில் 8,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட தொட்டி கட்டுமானப் பணி நடைபெற்று வருகிறது.
இந்த மழை நீர் சேமிப்பு கட்டமைப்பை மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன் செவ்வாய்க்கிழமை பார்வையிட்டார். அப்போது, மாநகராட்சி ஆணையர் எம்.இளங்கோவன், செயற்பொறியாளர் விஜயகுமார் ஆகியோரிடம் மழை நீர் சேகரிப்பு குறித்த விவரங்களைக் கேட்டறிந்தார்.
இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் கூறியதாவது:
ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் மொட்டை மாடியில் சேகரமாகும் மழைநீரை சுத்திகரிப்பு செய்து குடிநீராகப் பயன்படுத்த உள்ளோம். பழைய கட்டடத்தில் 2,000 லிட்டரும், புதிய கட்டடத்தில் 8,000 லிட்டர் தண்ணீர் சேமிக்கும் வகையிலான தொட்டி கட்டப்பட்டுள்ளது என்றார்.