லீக் போட்டிகள்: ரெயின்போ கிரிக்கெட் கிளப் அணி முதலிடம்
By DIN | Published On : 11th September 2019 06:46 AM | Last Updated : 11th September 2019 06:46 AM | அ+அ அ- |

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம், மாவட்ட கிரிக்கெட் சங்கம் நடத்திய இரண்டாவது டிவிசன் கிரிக்கெட் இறுதிப் போட்டியில் ஈரோடு ரெயின்போ அணியும், மெஜஸ்டிக் கப்ஸ் கிரிக்கெட் கிளப் அணியும் விளையாடியதில் ரெயின்போ அணி வெற்றி பெற்று முதலிடம் பெற்றனர்.
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம், மாவட்ட கிரிக்கெட் சங்கம் ஈரோடு நடத்தும் 2018-2019 ஆம் ஆண்டுகளுக்கான கிளப்களுக்கிடையேயான முதல் டிவிசன் லீக் போட்டிகள், மொடக்குறிச்சி சின்னியம்பாளையம் மைதானத்திலும் அல்அமீன் பொறியியல் கல்லூரி மைதானத்திலும் நடைபெற்றது. இதில், அரையிறுதிப் போட்டியில் ரெயின்போ அணி, மாதா அணியை வென்றும், ஈரோடு மெஜஸ்டிக் கப்ஸ் அணி, ஸ்டார் கிரிக்கெட் அணியை வெற்றி பெற்றும் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது. இதன் இறுதிப் போட்டி, மொடக்குறிச்சி சின்னியம்பாளையம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது.
இதில், டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஈரோடு மெஜஸ்டிக் கப்ஸ் அணி 48.1 ஓவர்களில் 211 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது.
இதில், மெஜஸ்டிக் கப்ஸ் அணி வீரர் அரவிந்த் ராஜ் 33 ரன்களும், அஜித்குமார் 31 ரன்களும் எடுத்தனர்.
ரெயின்போ அணி வீரர் நவநீதன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பின்னர் ஆடிய ஈரோடு ரெயின்போ அணி 49.3 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 213 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றனர்.
இதில், தினேஷ் 77 ரன் எடுத்து வெற்றி பெற உதவினார். ஈரோடு ரெயின்போ அணி முதலிடம் பெற்றது. வெற்றி பெற்ற அணியினருக்குப் பரிசுகளும் சான்றிதழ்களும்
வழங்கப்பட்டன.