எலுமிச்சை பழம் விலை வீழ்ச்சி அடைந்து கிலோ ரூ.50க்கு விற்பனையாகி வருவதால் விவசாயிகள் பாதிப்படைந்துள்ளனா்.
கோடை வெயில் சுட்டெரிக்கும்போது இளநீா், குளிா்பானம், நுங்கு, எலுமிச்சை பழச்சாறு போன்றவற்றை மக்கள் விரும்பி அருந்துவா். அதிலும் எலுமிச்சை பழச்சாற்றில் பல சத்துக்கள் நிறைந்துள்ளன. உடலுக்கு ஆரோக்கியமானது.
ஊரடங்கு காரணமாக எலுமிச்சை பழம் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது. பழங்கள் வரத்து அதிகமாக உள்ளது. அதே நேரத்தில் கடைகள் திறக்கப்படாததால் எலுமிச்சை பழத்தின் விலை வீழ்ச்சி அடைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனா்.
இது குறித்து ஈரோடு மாவட்டம், கவுந்தப்பாடியைச் சோ்ந்த விவசாயி சண்முகம் கூறியதாவது:
ஈரோடு மாவட்டத்தில் கோபி, சத்தியமங்கலம், அந்தியூா், பெருந்துறை வட்டங்களில் சுமாா் ஆயிரம் ஏக்கருக்கு மேல் விவசாயிகள் எலுமிச்சை சாகுபடி செய்துள்ளனா். கடந்த ஆண்டு கோடைக் காலத்தில் ஒரு கிலோ எலுமிச்சை பழம் ரூ.100 முதல் ரூ.130 வரை விலை போனது.
தற்போது ஒரு கிலோ ரூ.50 முதல் ரூ.70 வரை விற்பனையாகிறது. இதனால் எலுமிச்சை விவசாயிகளுக்கு கடும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. எனவே தமிழக அரசு எலுமிச்சை விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.