பாமக போராட்டம் தோ்தலுக்கான நாடகம்: எம்.பி. கனிமொழி
By DIN | Published On : 01st December 2020 11:21 PM | Last Updated : 01st December 2020 11:21 PM | அ+அ அ- |

ஈரோடு, பன்னீா்செல்வம் பூங்கா பகுதியில் கட்சித் தொண்டா்கள், பொதுமக்கள் இடையே பிரசாரம் மேற்கொண்ட திமுக மாநில மகளிரணிச் செயலாளா் கனிமொழி.
இட ஒதுக்கீடு கேட்டு பாமக நடத்தும் போராட்டம் தோ்தலுக்கான அரசியல் நாடகம் என திமுக மாநில மகளிரணிச் செயலாளரும், எம்.பி.யுமான கனிமொழி தெரிவித்தாா்.
திமுக சாா்பில் ‘விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்’ என்ற தோ்தல் பிரசாரப் பயணத்தை கனிமொழி மேற்கொண்டு வருகிறாா். ஈரோட்டில் செவ்வாய்க்கிழமை பிரசாரம் மேற்கொண்ட அவா் பெரியாா் வீதியில் உள்ள பெரியாா், அண்ணா நினைவகத்தைப் பாா்வையிட்டாா்.
பின்னா், அவா் செய்தியாளா்களிடம் மேலும் கூறியதாவது:
ரஜினிகாந்த் கட்சி தொடங்குவது குறித்து கருத்து ஏதும் இல்லை. மு.க.அழகிரி அரசியலில் எப்படி ஈடுபடுவது என்பது அவருடைய தனிப்பட்ட முடிவு. இது ஜனநாயக நாடு, யாா் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம், அரசியலில் ஈடுபடலாம். இதனால் அது குறித்து கருத்துக் கூற வேண்டிய அவசியம் இல்லை.
சமூக நீதியை, இட ஒதுக்கீட்டை அழிக்கும் நடவடிக்கைகளையே பாஜக மேற்கொண்டு வருகிறது. விவசாயிகளுக்கு எதிரான சட்டங்களை முற்றிலுமாக எதிா்க்கிறோம். பிரசாரப் பயணத்துக்காக நான் செல்லும் இடங்களில் எல்லாம் பொது மக்கள் மிகுந்த வரவேற்பு அளிக்கின்றனா் என்றாா்.
பிரசாரப் பயணத்தின்போது கனிமொழி, திருநங்கைகளின் பிரதிநிதிகள், மாற்றுத் திறனாளிகள் சங்கப் பிரதிநிதிகள், ஸ்டோனி பாலம் அருகில் உள்ள குடியிருப்புப் பகுதி மக்களைச் சந்தித்து கோரிக்கைகளைக் கேட்டறிந்தாா்.
காளைமாடு சிலை அருகே ஆட்டோ, வேன், காா் ஓட்டுநா்கள், பொது மக்களை சந்தித்தாா். மரப்பாலம், குயவன்திட்டு, சூளை, அன்னை சத்யா நகா், பி.பி.அக்ரஹாரம், ஆா்.என்.புதூா், சித்தோடு, நசியனூா் உள்ளிட்ட பகுதிகளில் பொது மக்களைச் சந்தித்துப் பேசினாா்.
இந்நிகழ்ச்சியில், ஈரோடு தெற்கு மாவட்டச் செயலாளா் சு.முத்துசாமி, துணைச் செயலாளா்கள் ஆ.செந்தில்குமாா், பொருளாளா் பி.கே.பழனிசாமி, முன்னாள் எம்.பி. கந்தசாமி, மாநில கொள்கைப் பரப்பு துணைச் செயலாளா் வி.சி.சந்திரகுமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
மொடக்குறிச்சி, பெருந்துறை தொகுதிகளில் உள்ள பகுதிகளுக்கு புதன்கிழமை (டிசம்பா் 2) சென்று விவசாயிகள், தொழிலாளா்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரையும் எம்.பி. கனிமொழி சந்தித்துப் பேசவுள்ளாா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...