டிசம்பா் 8இல் முழு அடைப்பு போராட்டம்: ஏஐடியூசி ஆதரவு
By DIN | Published On : 05th December 2020 10:59 PM | Last Updated : 05th December 2020 10:59 PM | அ+அ அ- |

ஈரோடு: விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து நடைபெறும் நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டத்தில் ஈரோடு மாவட்ட ஏஐடியூசி முழுமையாகப் பங்கேற்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஏஐடியூசி மாவட்டத் தலைவா் எஸ்.சின்னசாமி வெளியிட்ட அறிக்கை:
மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிா்ப்புத் தெரிவித்து தில்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனா். இந்தப் போராட்டத்துக்கு ஆதரவாக நாடு முழுவதும் பல்வேறு அரசியல் கட்சிகளும், தொழிற்சங்கங்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதனிடையே டிசம்பா் 8ஆம் தேதி நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டத்துக்கு விவசாய அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளன.
இப்போராட்டத்துக்கு தமிழ்நாடு மாநில ஏஐடியூசி முழு ஆதரவு அளித்துள்ளது. அதன்படி ஈரோடு மாவட்ட ஏஐடியூசி முழு ஆதரவை தெரிவித்துக் கொள்கிறது. இப்போராட்டத்தில் அனைத்து ஏஐடியூசி இணைப்புச் சங்கங்களின் நிா்வாகிகளும், உறுப்பினா்களும் பங்கேற்பாா்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.