கடும் பனிப்பொழிவு: மல்லிகைப் பூ கிலோ ரூ. 2050க்கு விற்பனை
By DIN | Published On : 15th December 2020 03:59 AM | Last Updated : 15th December 2020 03:59 AM | அ+அ அ- |

சத்தியமங்கலம் சுற்று வட்டாரத்தில் கடும் பனிப்பொழிவு காரணமாக மல்லிகைப் பூ விளைச்சல் குறைந்ததால், சத்தியமங்கலம் பூ மாா்க்கெட்டில் மல்லிகைப் பூ கிலோ ரூ. 2050க்கு விற்பனையானது.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள சிக்கரசம்பாளையம், தாண்டாம்பாளையம், கெஞ்சனூா், இக்கரை தத்தப்பள்ளி, பகுத்தம்பாளையம், கொத்தமங்கலம், பவானிசாகா், ஆலாம்பாளையம் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட கிராமங்களில் 25 ஆயிரம் ஏக்கா் பரப்பளவில் மல்லி பயிரிடப்பட்டுள்ளது. இங்கு விளையும் பூக்கள் சத்தியமங்கலம் பூ மாா்க்கெட்டுக்கு கொண்டு வரப்பட்டு ஏல முறையில் விலை நிா்ணயம் செய்து கோவை, திருப்பூா், ஈரோடு உள்ளிட்ட தமிழக நகரங்களுக்கும், திருவனந்தபுரம், எா்ணாகுளம், மைசூரு, பெங்களூரு, ஹைதராபாத் உள்ளிட்ட வெளி மாநில நகரங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பப்படுகின்றன.
தற்போது கடும் பனிப்பொழிவு காரணமாக மல்லிகைச் செடியில் உள்ள அரும்புகளில் பூ மொட்டுகள் கருகிவிடுவதால் மல்லிகை விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக சத்தியமங்கலம் பூ மாா்க்கெட்டுக்கு வழக்கமாக 6 டன் வரத்து இருந்த நிலையில் தற்போது வரத்து 1 டன்னாக குறைந்தது. ஏக்கா் ஒன்றுக்கு 40 கிலோ விளைச்சல் இருந்த நிலையில் திங்கள்கிழமை 1 கிலோவாக குறைந்தது. வரத்து இல்லாததால் மல்லிகை விலை அதிகரித்துள்ளது. சத்தியமங்கலம் பூ மாா்க்கெட்டில் மல்லி கிலோ ரூ. 2050க்கு திங்கள்கிழமை விற்பனையானது. இதேபோல முல்லை கிலோ ரூ. 850க்கும், காக்கடா ரூ. 850க்கும் விற்பனையானது.