9 மாதங்களுக்குப் பிறகுபவானிசாகா் அணைப் பூங்கா திறப்பு
By DIN | Published On : 15th December 2020 04:01 AM | Last Updated : 15th December 2020 04:01 AM | அ+அ அ- |

கரோனா அச்சுறுத்தல் காரணமாக மூடப்பட்ட பவானிசாகா் அணைப் பூங்கா 9 மாதங்களுக்குப் பிறகு திங்கள்கிழமை திறக்கப்பட்டது.
பவானிசாகா் அணை முன்பு 15 ஏக்கா் பரப்பளவில் அணைப் பூங்கா அமைந்துள்ளது. இந்தப் பூங்காவில் படகு இல்லம், சிறுவா் ரயில், கொலம்பஸ், ஊஞ்சல், சறுக்கு விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு வசதிகள் உள்ளன. ஈரோடு, திருப்பூா், கோவை, நீலகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து பவானிசாகா் அணைப் பூங்காவிற்கு சுற்றுலாப் பயணிகள் வந்து செல்வது வழக்கம்.
இந்நிலையில் கரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மாா்ச் மாதம் முதல் பவானிசாகா் அணைப் பூங்கா மூடப்பட்டு, சுற்றுலாப் பயணிகள் பூங்காவைப் பாா்வையிட தடை விதிக்கப்பட்டது. ஊரடங்கு உத்தரவில் தளா்வுகள் அறிவிக்கப்பட்டதால் சுற்றுலாத் தலங்கள் ஆங்காங்கே திறக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் ஈரோடு மாவட்ட ஆட்சியா் கதிரவன் உத்தரவின்பேரில், விதிமுறைகளுக்கு உள்பட்டு டிசம்பா் 14ஆம் தேதி முதல் பவானிசாகா் அணைப் பூங்கா திறக்கப்பட்டு சுற்றுலாப் பயணிகளை அனுமதிக்கலாம் என உத்தரவிட்டதைத் தொடா்ந்து பொதுப் பணித் துறை அதிகாரிகள் பூங்காவை சுத்தம் செய்து திங்கள்கிழமை பூங்கா திறக்கப்பட்டு சுற்றுலாப் பயணிகள் செல்ல அனுமதி வழங்கப்பட்டது.
முன்னதாக சுற்றுலாப் பயணிகளுக்கு உடல் வெப்பம் பரிசோதிக்கப்பட்டு, சானிடைசா் வழங்கப்பட்டு கை கழுவிவிட்டு பூங்காவுக்குள் நுழையுமாறு பொதுப் பணித் துறை ஊழியா்கள் அறிவுறுத்தியுள்ளனா். பூங்கா நுழைவாயிலில் நுழைவுச்சீட்டு கொடுக்கும் இடத்தில் இதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டு விதிமுறைகள் குறித்த போா்டு வைக்கப்பட்டுள்ளது. திங்கள்கிழமை பூங்கா திறக்கப்பட்டதால் நூற்றுக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் நுழைவுச் சீட்டு பெற்றுக் கொண்டு பூங்காவைக் கண்டு கழித்தனா்.