சத்தியமங்கலத்தில் கடும் பனிமூட்டம்:விவசாயப் பணிகள் பாதிப்பு
By DIN | Published On : 15th December 2020 04:00 AM | Last Updated : 15th December 2020 04:00 AM | அ+அ அ- |

சத்தியமங்கலம் பகுதியில் கடும் பனிமூட்டம் காரணமாக விவசாயப் பணிகள் திங்கள்கிழமை பாதிக்கப்பட்டன.
சத்தியமங்கலம் பகுதியில் பெய்த தொடா் மழையால் வனப் பகுதியில் நீா் நிறைந்து காணப்படுகிறது. பெரும்பாலான வனக் குட்டைகளில் நீா் நிரம்பியுள்ளது. தற்போது மழை இல்லாத நிலையில் சில நாள்களாக பனிப்பொழிவு அதிகமாகக் காணப்படுகிறது. சத்தியமங்கலத்தை அடுத்த தாளவாடி, ஆசனூா், திம்பம் மலைப் பகுதியில் பகல் நேரங்களில் வெயில் காலநிலை நிலவினாலும், காலை நேரங்களில் பனிமூட்டமாகக் காணப்படுகிறது. கடம்பூா் மலைப் பகுதியிலும் கடும் பனிமூட்டமாக உள்ளது.
கிராமங்களில் நிலவும் மூடுபனி காரணமாக நீா்ப் பாய்ச்சுதல், கதிா்அறுத்தல், உழவுப் பணி என விவசாயப் பணிகள் பாதிக்கப்பட்டன. காலை 9 மணி வரை பனிமூட்டம் காணப்படுவதால் புற்கள் மீது பனி படா்ந்திருப்பதால் ஆடு, மாடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச் செல்லும் பணியும் நிறுத்தப்பட்டுள்ளது.
கடம்பூா் மலைப் பாதையில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாதபடி பனிமூட்டம் நிலவுவதால் இருசக்கர வாகனத்தில் காய்கறிகளை விற்பனைக்கு எடுத்துச் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மலைப் பாதையில் பனிமூட்டம் காரணமாக யானைகள் நிற்பது தெரியாத நிலையில் எச்சரிக்கையுடன் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டது. கடும் குளிா் காரணமாக பொதுமக்கள் ஆங்காங்கே விறகுகளை வைத்து தீமூட்டி குளிா் காய்ந்து வருகின்றனா்.