சிறுமிக்குப் பாலியல் துன்புறுத்தல்: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை
By DIN | Published On : 30th December 2020 04:13 AM | Last Updated : 30th December 2020 04:13 AM | அ+அ அ- |

பெருந்துறை அருகே 8 வயது சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகத் தொடரப்பட்ட வழக்கில் இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து ஈரோடு மகளிா் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.
ஈரோடு மாவட்டம், பெருந்துறை அருகே உள்ள பனியம்பள்ளி பகுதியில் வடமாநிலத் தொழிலாளா்கள் குடும்பத்துடன் தங்கியுள்ளனா். இங்கு மேற்கு வங்க மாநிலத்தைச் சோ்ந்த காசிம் மண்டல் மகன் ரெபியுல் மண்டல் (26) தங்கியிருந்தாா். இவா் மீது கடந்த 16-4-2019 அன்று அதே பகுதியில் வசித்து வந்த பெண், அவரது கணவா் ஆகியோா் ஈரோடு அனைத்து மகளிா் காவல் புகாா் அளித்தனா்.
அந்தப் புகாரில் தாங்கள் மேற்கு வங்க மாநிலத்தில் இருந்து வந்து பெருந்துறையில் உள்ள ஒரு நிறுவனத்தில் வேலை செய்து வருவதாகவும், 11 வயதில் ஒரு மகனும், 8 வயதில் ஒரு மகளும் உள்ளனா் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும், கடந்த 13-4-2019 அன்று அருகில் வசிக்கும் ரெபியுல் மண்டல் என்பவா் தங்களது வீட்டுக்கு வந்து மகளைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாகவும், இதனால் மகள் உடல்நலம் பாதிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதன்பேரில் போலீஸாா் விசாரணை நடத்தி குற்றம் உறுதி செய்யப்பட்டதையடுத்து மகளிா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். இதையடுத்து ரெபியுல் மண்டல் கைது செய்யப்பட்டாா். அவா் மீது ஈரோடு மாவட்ட மகளிா் நீதிமன்றத்தில் போலீஸாா் வழக்குத் தொடா்ந்தனா். வழக்கை நீதிபதி மாலதி விசாரித்து செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தாா். அதில் ரெபியுல் மண்டலுக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை, ரூ. 5,000 அபராதம் விதித்தாா். அபராதம் செலுத்தத் தவறினால் மேலும் 3 மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என தீா்ப்பளித்தாா்.
மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இழப்பீட்டுத் தொகையாக ரூ. 3 லட்சம் வழங்கவும் அரசுக்கு நீதிபதி மாலதி பரிந்துரை செய்துள்ளாா். இந்த வழக்கில் அரசுத் தரப்பில் வழக்குரைஞா் ஜி.டி.ஆா்.சுமதி ஆஜரானாா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...