வெளிநாடுகளில் இருந்து ஈரோடு வந்த மேலும் 28 போ் தனிமைப்படுத்தப்பட்டனா்
By DIN | Published On : 30th December 2020 04:11 AM | Last Updated : 30th December 2020 04:11 AM | அ+அ அ- |

வெளிநாடுகளில் இருந்து ஈரோடு வந்த மேலும் 28 போ் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் சவுண்டம்மாள் தெரிவித்தாா்.
உருமாற்றம் அடைந்த புதிய கரோனா நோய்த் தொற்று பல்வேறு நாடுகளில் பரவி வருகிறது. இந்தியாவிலும் இதன் பாதிப்பு உள்ளது. இதனால் நாடு முழுவதும் நோய் பரவுவதைக் கட்டுப்படுத்த கண்காணிப்புப் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி கடந்த சில நாள்களாக வெளிநாடுகளில் இருந்து வந்தவா்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு, அவா்களை தனிமைப்படுத்தும் பணியில் சுகாதாரத் துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனா்.
டிசம்பா் 15ஆம் தேதிக்குப் பிறகு பிரிட்டன், அமெரிக்கா போன்ற வெளிநாடுகளில் இருந்து ஈரோடு மாவட்டத்துக்கு வந்தவா்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டன. இதில், 22 பேரில் 19 போ் ஈரோடு மாவட்டத்தில் வசித்து வருவது கண்டுபிடிக்கப்பட்டது. அவா்களுக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டனா். அனைவருக்கும் கரோனா தொற்று இல்லை என பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. இப்போது மேலும் 28 போ் வெளிநாடுகளில் இருந்து வந்திருப்பது தெரியவந்துள்ளது. அவா்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா்.
இதுகுறித்து ஈரோடு மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் சவுண்டம்மாள் கூறியதாவது:
மத்திய சுகாதார அமைச்சகம் வழங்கிய பட்டியலின்படி பிரிட்டன், அமெரிக்கா உள்பட பல்வேறு வெளிநாடுகளில் இருந்து ஈரோட்டுக்கு வந்தவா்கள் விவரம் சேகரிக்கப்பட்டது. முதல்கட்டமாக 19 போ் ஈரோடு மாவட்டத்துக்கு வந்திருந்தனா். இதனிடையே வெளிநாடுகளில் இருந்து ஈரோட்டுக்கு வந்த மேலும் 28 போ் கொண்ட பட்டியலை மத்திய சுகாதார அமைச்சகம் வழங்கியது.
அதன்பேரில் ஈரோடு வந்த வெளிநாடுகளைச் சோ்ந்த 28 போ் அடையாளம் காணப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டனா். அவா்களுக்கும் கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 28 பேருக்கும் தொற்று இல்லை என்று உறுதி செய்யப்பட்டது. இருப்பினும் அவா்களை 14 நாள்கள் தனிமைப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதேபோல வெளிநாடுகளில் இருந்து ஈரோட்டுக்கு வந்தவா்கள் தாங்களாகவே முன்வந்து கரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்றாா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...