குடற்புண் நோய் தாக்கி பெண் யானை சாவு
By DIN | Published On : 04th February 2020 06:18 AM | Last Updated : 04th February 2020 06:18 AM | அ+அ அ- |

உயிரிழந்த பெண் யானையை ஆய்வு செய்யும் கால்நடை மருத்துவா் அசோகன்.
கடம்பூா் மலைப் பகுதியில் குடற்புண் நோய் தாக்கி பெண் யானை திங்கள்கிழமை உயிரிழந்தது.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், கடம்பூா் வனச் சரகத்துக்கு உள்பட்ட கோவிலூா் வனப் பகுதியில் வனத் துறை ஊழியா்கள் ரோந்து சென்றபோது அப்பகுதியில் துா்நாற்றம் வீசியுள்ளது. வன விலங்கு உயிரிழந்துள்ளதா என வனத் துறையினா் தேடிப் பாா்த்தபோது யானை இறந்து கிடப்பதைக் கண்டனா்.
இதுகுறித்து, சத்தியமங்கலம் மாவட்ட வன அலுவலா் அருண்லாலுக்கு தகவல் தெரிவித்தனா். மாவட்ட வன அலுவலரின் உத்தரவின்பேரில், கடம்பூா் வனச்சரக அலுவலா் (பொ) பொ்னாட் முன்னிலையில், யானையின் உடலை வனத் துறை கால்நடை மருத்துவா் அசோகன் பிரேதப் பரிசோதனை செய்தாா்.
பரிசோதனையில், சுமாா் 22 வயது மதிக்கத்தக்கப் பெண் யானை குடற்புண் நோய் தாக்கி உயிரிழந்தது தெரியவந்தது. யானையின் உடல் பறவைகள், விலங்குகளுக்கு உணவாக அப்படியே வனப் பகுதியில் விடப்பட்டது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...