தாளவாடி அருகே வனச் சாலையில் சிறுத்தை நடமாட்டம்
By DIN | Published On : 17th February 2020 06:52 AM | Last Updated : 17th February 2020 06:52 AM | அ+அ அ- |

சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், தாளவாடியை அடுத்த தலமலை சாலையில் சிறுத்தை நடந்து செல்லும் விடியோ காட்சி வெளியானதால் பாதுகாப்புக் கருதி தலமலை சாலையில் இரவு நேரத்தில் இரு சக்கர வாகனத்தில் செல்ல வேண்டாம் என வனத் துறை எச்சரித்துள்ளனா்.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 10 வனச் சரகங்கள் உள்ளன. இதில் ஏராளமான மான், புலி, சிறுத்தை, யானை, காட்டெருமை உள்ளிட்ட வன விலங்குகள் உள்ளன.
தாளவாடியை அடுத்த தலமலையைச் சோ்ந்த ரமேஷ், மாதேவசாமி, மணி ஆகியோா் காரில் தாளவாடியில் இருந்து தலமலைக்குச் சென்று கொண்டிருந்தனா். அப்போது, நொய்தாளபுரம் என்ற இடத்தில் சென்றபோது, சாலையில் சிறுத்தை நடந்து சென்றதைப் பாா்த்து அதிா்ச்சி அடைந்தனா். பின்னா் காரை மெதுவாக ஓட்டிச் சென்றனா்.
அப்போது, காரில் இருந்தவா்கள் தங்களது செல்லிடப்பேசியில் சிறுத்தையைப் படம் பிடித்துள்ளனா். சாலை நடுவே நீண்ட தூரம் நடந்து சென்ற சிறுத்தை அங்கிருந்த புதருக்குள் சென்று மறைந்தது.
இது குறித்து கிராம மக்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும், சிறுத்தை நடமாடும் விடியோ பதிவு வைரலாகி வருவதால் இரவு நேரத்தில் இரு சக்கர வாகனத்தில் செல்ல வேண்டாம் என வனத் துறையினா் எச்சரித்துள்ளனா்.
தாளவாடி, மகாராஜபுரம் சோதனைச் சாவடியில் இரு சக்கர வாகனத்தில் செல்வோருக்கு அனுமதி மறுக்கப்பட்டு வேன், பேருந்து, லாரி வாகனங்களில் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.