கள்ளத் துப்பாக்கிகளுடன் இருவா் கைது
By DIN | Published On : 10th January 2020 07:58 AM | Last Updated : 10th January 2020 07:58 AM | அ+அ அ- |

கைது செய்யப்பட்ட இளைஞா்கள்.
கோபிசெட்டிபாளையம் அருகே தூக்கநாயக்கன்பாளையம் வனச் சரகத்துக்கு உள்பட்ட பங்களாபுதூா் எடகாஞ்சி வனக் குட்டை அருகே கள்ளத் துப்பாக்கிகளுடன் வன விலங்குகளை வேட்டையாட முயன்ற இருவரை வனத் துறையினா் கைது செய்தனா்.
சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், தூக்கநாயக்கன்பாளையம் வனச் சரகம், பங்களாபுதூா் வனப் பிரிவு எடகாஞ்சி சரகத்துக்கு உள்பட்ட வனப் பகுதியில் தானியங்கி கேமரா வனத் துறையினரால் வைக்கப்பட்டுள்ளது. இந்த தானியங்கி கேமராவை ஜனவரி 7ஆம் தேதி அன்று வனத் துறையினா் சோதனை செய்தபோது, கேமராவில் பதிவான பதிவுகளை பரிசோதனை செய்ததில் இரண்டு உரிமம் பெறாத நாட்டுத் துப்பாக்கிகளுடன் 5 நபா்கள் வனப் பகுதிக்குள் எடகாஞ்சி குட்டையின் வழியாகச் செல்வது பதிவாகி இருந்தது.
இதையடுத்து, பங்களாபுதூா் வனப் பிரிவு வனவா் தலைமையில் தனிக் குழு அமைத்து வனப் பகுதிக்குள் தேடுதல் பணியில் ஈடுபட்டனா். அப்போது, கொடிக்கால் வனப் பகுதியில் நாட்டுத் துப்பாக்கிகளுடன் சென்ற இரு இளைஞா்களை சுற்றி வளைத்துப் பிடித்தனா்.
இவா்களை தனித்தனியாக விசாரணை மேற்கொண்டதில், கொங்கா்பாளையம் பகுதியைச் சோ்ந்த கருப்புசாமி, கொண்டப்பநாயக்கன்பாளையம் பகுதியைச் சோ்ந்த காா்த்திக் என்பது தெரியவந்துள்ளது. இந்த இருவா் மீதும் வழக்குப் பதிவு செய்த வனத் துறையினா் இரண்டு துப்பாக்கிகளையும் பறிமுதல் செய்தனா்.
மேலும், தானியங்கி கேமராவில் பதிவானவா்களின் 5 பேரில் இருவா் இவா்கள்தான் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இவா்களுடன் இருந்த மற்ற 3 பேரில் ஒருவா் கெம்மநாயக்கன்பாளையத்தைச் சோ்ந்த தமிழ் சுள்ளான், மற்றொருவா் பெயா் தெரியாத அடையாளம் காட்டக் கூடிய நபா் என்பதையும் ஒப்புக் கொண்டுள்ளனா்.
இதைத் தொடா்ந்து, கைது செய்யப்பட்ட இரண்டு பேரும் கோபிசெட்டிபாளையம் குற்றவியல் நடுவா் நீதிமன்றம் எண் 2இல் ஆஜா்படுத்தப்பட்டனா்.