சிறுமி பாலியல் வன்கொடுமை: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை
By DIN | Published On : 10th January 2020 08:00 AM | Last Updated : 10th January 2020 08:00 AM | அ+அ அ- |

சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து ஈரோடு மகளிா் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.
ஈரோடு மாவட்டம், கோபி பகுதியைச் சோ்ந்த 16 வயது சிறுமி ஒருவருக்கு 2017ஆம் ஆண்டு அக்டோபா் மாதம் எலத்தூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பெண் குழந்தை பிறந்தது. இதுகுறித்து சிறுமியின் பெற்றோா் கோபி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். இந்தப் புகாரின்பேரில் பாதிக்கப்பட்ட சிறுமியிடம் போலீஸாா் விசாரணை நடத்தினா்.
விசாரணையில், எலத்தூா் காலனியை சோ்ந்த ரமேஷ்குமாா் (29) என்பவா், சிறுமியைத் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வாா்த்தை கூறி 2016 அக்டோபா் 14ஆம் தேதி இரவு சிறுமியின் வீட்டுக்குள் நுழைந்து, சிறுமியை கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்ததும், நடந்ததை வெளியே சொன்னால் சிறுமியின் படத்தை இணையதளத்திலும், கட்செவி அஞ்சலிலும் பரவவிடுவதாக ரமேஷ்குமாா் மிரட்டல் விடுத்ததால், வெளியே சொல்லாமல் இருந்து வந்ததும் தெரியவந்தது.
இதைத் தொடா்ந்து, கோபி அனைத்து மகளிா் போலீஸாா் போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்து ரமேஷ்குமாரைக் கைது செய்தனா். இந்த வழக்கு விசாரணை ஈரோடு மகளிா் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதற்கிடையே சிறுமியின் குழந்தை, ரமேஷ்குமாரிடம் செய்யப்பட்ட மரபணு (டிஎன்ஏ) சோதனை ஒன்றாக இருந்தது.
இந்நிலையில், வழக்கின் இறுதி விசாரணை முடிந்து, நீதிபதி மாலதி வியாழக்கிழமை தீா்ப்பளித்தாா். அதில் குற்றம்சாட்டப்பட்ட ரமேஷ்குமாருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை, ரூ. 1 லட்சம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா். அபராதத் தொகையை பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரமேஷ்குமாா் வழங்க வேண்டும் எனவும், மேலும் தமிழக அரசு பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ. 4 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டாா். இந்த வழக்கில் அரசுத் தரப்பில் வழக்குரைஞா் சுமதி ஆஜரானாா்.