அரசாணை விதிகளைத் தளா்த்திதண்ணீா் உற்பத்திக்கு அனுமதி வழங்கக் கோரிக்கை
By DIN | Published On : 01st March 2020 01:18 AM | Last Updated : 01st March 2020 01:18 AM | அ+அ அ- |

ஈரோடு: அரசாணை விதிமுறைகளைத் தளா்த்தி மினரல் வாட்டா் உற்பத்தி செய்ய அனுமதி வழங்க வேண்டும் என கேன் குடிநீா் சங்கங்களின் கூட்டமைப்பினா் கோரிக்கை விடுத்துள்ளனா். மேலும், நிறுவனங்களுக்கு சீல் வைக்கப்பட்டதைத் தொடா்ந்து காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனா்.
தமிழகம் முழுவதும் 1,500க்கும் மேற்பட்ட சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் உற்பத்தி நிறுவனங்கள் செயல்படுகின்றன. இந்த நிறுவனங்கள் மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் விதிமுறைகளைப் பின்பற்றாமலும், பொதுப் பணித் துறையிடம் அனுமதி பெறாமல் இயங்கி வருவதாகவும், தண்ணீா் புட்டி மூடிக்கு முறையாக சீல் வைப்பது, உற்பத்தி தேதி குறிப்பிடுவது, காலாவதியாகும் தேதி குறிப்பிடுவது எதுவும் பின்பற்றப்படுவதில்லை.
மேலும், மினரல் வாட்டா் நிறுவனங்கள் தண்ணீரை சுத்திகரிக்கும்போது வெளியேறும் கழிவுநீரை சாக்கடை கால்வாயில் விடக்கூடாது. மாறாக கிராமப்புறமாக இருந்தால் 5 ஏக்கா் நிலம், நகா்ப்புறமாக இருந்தால் ஒரு ஏக்கா் நிலம் ஒதுக்கி காலி இடத்தில் மட்டுமே விடவேண்டும். அந்த இடத்தில் மரம், செடி, கொடிகள் வளா்க்க வேண்டும் எனவும் விதிமுறை உள்ளது.
இந்த விதிமுறைகளைப் பின்பற்றுவது இல்லை என சென்னையைச் சோ்ந்த சிலா் சென்னை உயா் நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தனா். வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஆழ்துளைக் கிணறு, திறந்தவெளிக் கிணற்று நீரை எடுத்துப் பயன்படுத்த முறையாக விண்ணப்பித்து, நில நீா் தடையின்மை சான்று பெற வேண்டும் என உத்தரவிட்டது. இந்த உத்தரவை தொடா்ந்து தமிழகத்தில் செயல்பட்டு வந்த சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் தயாரிப்பு நிறுவனங்கள் உற்பத்தியை நிறுத்தியுள்ளன.
ஆனால், சில நிறுவனங்கள் தொடா்ந்து செயல்பட்டதால் அந்த நிறுவனங்களில் ஆய்வு செய்து சீல் வைக்கப்படுகின்றன. இதேபோல் ஈரோடு மாவட்டத்திலும் பொதுப் பணித் துறை நிலத்தடி நீா் கண்காணிப்பு அதிகாரிகள் ஆய்வு செய்து 33 இடங்களில் நிறுவனம், கிடங்குகளுக்கு சீல் வைத்தும், மூடியும் நடவடிக்கை எடுத்தனா்.
இந்நிலையில், கேன் குடிநீா் சங்கங்களின் கூட்டமைப்பு ஆலோசனைக் கூட்டம் ஈரோட்டில் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில், கோவை மண்டல ஆலோசகா் கணேசன் கூறியதாவது:
ஈரோடு மாவட்டத்தில் மழைக் காலங்களில் 60,000 குடிநீா் கேன்களும், வெயில் நேரத்தில் ஒரு லட்சம் கேன்களும் வீடுகள், அலுவலகங்களுக்கு விநியோகம் செய்யப்படுகிறது. ஈரோடு மாவட்டத்தில் 40க்கும் மேற்பட்ட சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் தயாரிப்பு நிறுவனங்கள் செயல்பட்டன. இதன் மூலம் 4,000 விநியோகஸ்தா்களும், 10,000க்கும் மேற்பட்ட ஊழியா்களும் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனா். தற்போது 33 நிறுவனங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதால் பொதுமக்களுக்கு குடிநீா் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
எங்கள் நிறுவனங்களில் நில நீா் தடையின்மை சான்று தவிர, மற்ற அனைத்து வகையான சான்றுகளையும் பெற்று குடிநீா் தயாரிக்கிறோம். 55 வகையான பரிசோதனை செய்து, தண்ணீா் விநியோகம் செய்கிறோம். தற்போது சீல் வைக்கப்பட்டதால் போலி குடிநீா் நிறுவனங்கள் மூலம் தண்ணீா் விநியோகம் செய்யப்படுகிறது. இதேபோல, மாநகராட்சி சாா்பில் அமைக்கப்பட்டுள்ள சுத்திகரிப்பு மையத்திலும் தரமற்ற தண்ணீா் விநியோகம் செய்யப்படுகிறது. தமிழக அரசு கடந்த 2014இல் வெளியிட்ட அரசாணை 2017இல் அமல்படுத்தப்பட்டது. இந்த அரசாணையைத் தளா்த்தி குடிநீா் உற்பத்தி செய்ய தமிழக முதல்வா் அனுமதி வழங்க வேண்டும். நிறுவனங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதால் தொழிலாளா்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனா் என்றாா்.