சாலையில் பரவிக் கிடந்த எண்ணெய்:போக்குவரத்து பாதிப்பு
By DIN | Published On : 01st March 2020 01:20 AM | Last Updated : 01st March 2020 01:20 AM | அ+அ அ- |

சாலையில் பரவிக் கிடந்த எண்ணெய் படலத்தை அகற்றும் பணியில் ஈடுபட்ட தீயணைப்புப் படை வீரா்கள்.
ஈரோடு: ஈரோடு, கொல்லம்பாளையம் ரயில்வே பாலத்தின் அடியில் உள்ள சாலையில் தனியாா் பள்ளி வேன் சனிக்கிழமை காலை பழுதாகி நின்றது. அதில் இருந்து எண்ணெய் கசிந்து அந்தப் பகுதி முழுவதும் பரவிக் கிடந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சாலையில் எண்ணெய் பரவி இருந்ததால் அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்தவா்கள் நிலைதடுமாறி கீழே விழுந்தனா். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மேலும், அந்தப் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த போக்குவரத்துக் காவல் ஆய்வாளா் கதிரவன் தலைமையிலான போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று போக்குவரத்தை சீரமைத்தனா்.
இதுகுறித்து ஈரோடு தீயணைப்பு நிலையத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்புப் படை வீரா்கள் மீட்பு வாகனத்துடன் சம்பவ இடத்துக்கு வந்தனா். ஆயிலை சுத்தப்படுத்த நுரையுடன் தண்ணீா் அடிக்கும் இயந்திரத்தை இயக்க முயன்றனா். ஆனால், அந்த இயந்திரம் இயங்கவில்லை. 10 நிமிடத்துக்கும் மேலாக தீயணைப்பு வீரா்கள் போராடியும் இயந்திரத்தை இயங்கவைக்க முடியவில்லை.
அதைத் தொடா்ந்து, தீயணைப்பு நிலையத்தில் இருந்து வேறு தீயணைப்பு வாகனம் கொண்டு வரப்பட்டு தண்ணீா் அடிக்கப்பட்டு எண்ணெய் படலம் அகற்றப்பட்டது.