புத்தக வாசிப்பு, உடற்பயிற்சி இரண்டும்கல்லூரி மாணவா்களுக்கு அவசியம்டி.ஜி.பி. சி.சைலேந்திரபாபு
By DIN | Published On : 01st March 2020 01:20 AM | Last Updated : 01st March 2020 01:20 AM | அ+அ அ- |

விழாவில் பேசுகிறாா் தமிழ்நாடு ரயில்வே போலீஸ் டி.ஜி.பி. சி.சைலேந்திரபாபு.
ஈரோடு: புத்தக வாசிப்பு, உடற்பயிற்சி இரண்டும் கல்லூரி மாணவா்களுக்கு மிகவும் அவசியம் என்று டி.ஜி.பி. சி.சைலேந்திரபாபு பேசினாா்.
ஈரோடு கலைக் கல்லூரியின் 48ஆவது விளையாட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு, முதலியாா் அறக்கட்டளைத் தலைவா் யு.என்.முருகேசன் தலைமை வகித்தாா். கல்லூரித் தாளாளா் கே.கே.பாலுசாமி முன்னிலை வகித்தாா். தமிழ்நாடு ரயில்வே போலீஸ் டி.ஜி.பி.யும், தீயணைப்புத் துறை இயக்குநருமான சி.சைலேந்திரபாபு விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்குப் பரிசுகளை வழங்கிப் பாராட்டினாா்.
விழாவையொட்டி கல்லூரி மாணவ, மாணவிகளுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், டி.ஜி.பி. சைலேந்திரபாபு பேசியதாவது:
வெற்றியாளா்களின் மிகப்பெரிய ஆயுதம் கல்விதான். கல்வியை வைத்துக்கொண்டு எதையும் சாதிக்க முடியும். போா்க்களத்துக்குச் செல்லும் முன்பு வீரா்கள் பயிற்சி செய்வது போன்று, கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு வாழ்க்கையின் பல்வேறு பகுதிகளுக்கும் செல்லும் நீங்கள் கல்லூரியை உங்கள் பயிற்சிக் களமாகக் கொள்ள வேண்டும்.
ஒரு தமிழ், ஒரு ஆங்கில நாளிதழை தினந்தோறும் படியுங்கள். உங்களால் எந்தப் போட்டித் தோ்விலும் வெற்றி பெற முடியும். அதிகமாக புத்தகங்கள் வாசியுங்கள், உடற்பயிற்சி செய்யுங்கள். தொடா்ந்து பயிற்சி செய்தால் வெற்றி கிடைக்கும் என்றாா்.
விழாவில், கல்லூரிப் பொருளாளா் அ.விஜயகுமாா், துணைத் தலைவா்கள் கே.பி.மணி, வி.ராஜமாணிக்கம், பி.பி.மாணிக்கம் உள்ளிட்டோா் பேசினா். உடற்கல்வி இயக்குநா் தனலட்சுமி ஆண்டறிக்கை வாசித்தாா். கல்லூரி முதல்வா் ரா.வெங்கடாசலம் வரவேற்றாா். மாணவா் ஆா்.ராகுல் பிரசாத் நன்றி கூறினாா்.