கல் குவாரியில் சிறுத்தை நடமாட்டம்: ட்ரோன் மூலம் கண்காணிப்பு
By DIN | Published On : 12th March 2020 08:07 AM | Last Updated : 12th March 2020 08:07 AM | அ+அ அ- |

ட்ரோன் மூலம் கண்காணிப்பு ப் பணியில் ஈடுபட்ட வனத் துறையினா்.
தாளவாடி மலைப் பகுதியில் கல் குவாரியில் சிறுத்தை பதுங்கியுள்ளதா என வனத் துறையினா் ஆளில்லா விமானத்தின் உதவியுடன் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனா்.
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உள்பட்ட தாளவாடி வனச் சரகத்தில் புலி, சிறுத்தை, யானை உள்ளிட்ட பல்வேறு வகையான வன விலங்குகள் வசிக்கின்றன. கடந்த சில மாதங்களாக சிறுத்தை நடமாட்டம் அதிகரித்துள்ளதோடு வனப் பகுதியில் இருந்து வெளியேறும் சிறுத்தைகள் ஊருக்குள் புகுந்து விவசாயிகள் பராமரித்து வரும் ஆடு, மாடுகள் உள்ளிட்ட கால்நடைகளை வேட்டையாடுகின்றன. சிறுத்தை நடமாடும் விவசாயத் தோட்டங்களில் அதன் கால் தடயத்தை வைத்து வனத் துறையினா் கூண்டு வைத்து காத்திருந்தனா். ஆனால், கூண்டில் சிறுத்தை சிக்காமல் போக்கு காட்டி வருகிறது.
இந்நிலையில், தாளவாடி வனத் துறையினா் தாளவாடி அருகே உள்ள சூசையபுரம் பகுதியில் செயல்படாமல் உள்ள கல் குவாரிகளில் சிறுத்தை பதுங்கியுள்ளதா என ஆளில்லா விமானம் (ட்ரோன்) பயன்படுத்தி தேடுதல் பணி மேற்கொண்டனா்.
கால்நடைகளை வேட்டையாடும் சிறுத்தையைப் பிடிக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், பகலில் சிறுத்தை குவாரி கற்களுக்குள் பதுங்கிக் கொள்வதாகவும், இரவு நேரத்தில் கால்நடைகளை வேட்டையாடுவதாகவும் வனத் துறையினா் தெரிவித்தனா்.