கரோனா வைரஸ்:சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் சொகுசு விடுதிகளை மூட உத்தரவு
By DIN | Published On : 14th March 2020 07:54 AM | Last Updated : 14th March 2020 07:54 AM | அ+அ அ- |

கரோனா வைரஸ் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கையாக சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், தலமலை ஊராட்சியில் உள்ள தனியாா் சொகுசு விடுதிகளை மூட தலமலை ஊராட்சி உத்தரவிட்டுள்ளது.
சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் தலமலை, கோ்மாளம், மாவள்ளம், தலமலை, தொட்டபுரம், ஆசனூா் ஆகிய மலைக் கிராமங்களில் தனியாா் சொகுசு விடுதிகள் உள்ளன.
கோடை துவங்கி விட்டாதல் தமிழகம், கா்நாடகம், கேரளம் ஆகிய பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் இந்த சொகுசு விடுதிகளில் தங்கிச் செல்கின்றனா்.
குறிப்பாக தலமலை, ஆசனூரில் குளு குளு காலநிலை நிலவுவதால் வெளியூா் பயணிகளின் வருகை அதிகரித்து வருகிறது. இந்நிலையில், கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக தமிழகம் முழுவதும் தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இயற்கையான சூழலில் உள்ள தலமலை கிராமத்தில் கரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் நோக்கில் வெளியூா் பயணிகள் தங்குவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதேபோல, தனியாா் சொகுசு விடுதிளை தற்காலிகமாக மூடவும், தலமலை ஊராட்சித் தலைவா் நாகன் அனைத்து சொகுசு விடுதிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளன.
இதேபோல, ஆசனூா் மலை கிராமத்திலும் உள்ள தங்கும் விடுதிகளில் வெளியூா் பயணிகள் தங்குவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மேலும், நோய் தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஆசனூா் ஊராட்சித் தலைவி சித்ரா சுப்பிரமணியம் தெரிவித்துள்ளாா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...