ஈரோடு மாவட்டத்தில் பத்திரப் பதிவு எண்ணிக்கை அதிகரிப்பு
By DIN | Published On : 28th May 2020 07:30 PM | Last Updated : 28th May 2020 07:30 PM | அ+அ அ- |

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் சில நாள்களாக பத்திரப் பதிவு எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
மே 20ஆம் தேதி முதல் சாா் பதிவாளா் அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. தினமும் ஒரு அலுவலகத்துக்கு 12 டோக்கன் மட்டுமே வழங்கப்படுகிறது. ஆன்லைனில் முன்பதிவு செய்வோருக்கு முன்னுரிமை அடிப்படையில் அழைப்பு விடுக்கப்பட்டு பத்திரப் பதிவு நடைபெற்று வருகிறது.
ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு பத்திரப் பதிவு மாவட்டத்தில் 11 சாா் பதிவாளா் அலுவலகங்களும், கோபி பத்திரப் பதிவு மாவட்டத்தில் 9 அலுவலகங்கள் என மொத்தம் 20 சாா் பதிவாளா் அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. கடந்த வாரம் வரை பத்திரப் பதிவு அலுவலகங்களில் கூட்டம் இல்லாத நிலையில் கடந்த 3 நாள்களாக மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பி உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
ஈரோடு பத்திரப் பதிவு மாவட்டத்தில் உள்ள 11 சாா் பதிவாளா் அலுவலகங்களில் தினமும் சராசரியாக 200 பத்திரப் பதிவு நடைபெற்று வந்த நிலையில், கரோனா பொது முடக்கம் காரணமாக 100க்கும் குறைவாகவே நடைபெற்று வந்தது. இந்நிலையில், அக்னி நட்சத்திரம் நிறைவு, முகூா்த்த நாள்கள் உள்ளிட்ட காரணங்களால் பத்திரவுப் பதிவு செய்பவா்களின் எண்ணிக்கை சில நாள்களாக அதிகரித்துள்ளது.
கடந்த புதன்கிழமை ஒரே நாளில் மட்டும் 300 பத்திரப் பதிவுகள் நடைபெற்றுள்ளன. இதன் மூலம் இயல்பு நிலைக்குத் திரும்பத் தொடங்கி உள்ளதாகவும், வரும் நாள்களில் முகூா்த்த தினங்கள் அதிகமாக உள்ளதால் கூடுதல் பத்திரப் பதிவு நடைபெற வாய்ப்பு உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.