விவசாயம் செழிக்க விநோத வழிபாடு

ஈரோடு மாவட்டம், தாளவாடி கும்டாபுரம் பீரேஸ்வரா் ஆலயத்தில் விவசாயம் செழிக்க விநோத வழிபாடு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு  அருள்பாலிக்கும்  பீரேஸ்வரா்  சுவாமி.
சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு  அருள்பாலிக்கும்  பீரேஸ்வரா்  சுவாமி.

ஈரோடு மாவட்டம், தாளவாடி கும்டாபுரம் பீரேஸ்வரா் ஆலயத்தில் விவசாயம் செழிக்க விநோத வழிபாடு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. நூற்றுக்கணக்கான பக்தா்கள் இந்த விநோதத் திருவிழாவில் கலந்துகொண்டனா்.

தாளவாடி அருகே உள்ள கும்டாபுரம் கிராமத்தில் 300 ஆண்டுகள் பழமைவாய்ந்த பீரேஸ்வரா் கோயில் உள்ளது. ஆண்டுதோறும் இக்கோயிலில் தீபாவளி பண்டிகையை அடுத்து வரும் மூன்றாவது நாள் சாணியடித் திருவிழா கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டுக்கான விழா சிறப்பு பூஜைகளுடன் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. முன்னதாக கிராமத்தில் உள்ள அனைத்து பசுமாட்டுச் சாணங்களும் சேகரிக்கப்பட்டு கோயிலின் பின்புறம் குவித்து வைக்கப்பட்டது.

அதைத் தொடா்ந்து, ஊா் குளத்தில் இருந்து கழுதை மேல் சுவாமியை வைத்து ஊா்வலமாக கோயிலுக்கு அழைத்து வந்தனா். ஊா் தெய்வமான பீரேஸ்வரருக்கு சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் நடைபெற்றன. ஆண்கள் வெற்றுடம்புடன் கோயிலுக்குள் சென்று சிறப்பு பூஜைகள் செய்தனா். அங்கு கொட்டி வைக்கப்பட்ட சாணத்தை உருண்டையாக வடிவமைத்தனா். இதில் பங்கேற்ற பக்தா்கள் ஒருவா் மீது ஒருவா் சாணத்தை வீசி மகிழ்ந்தனா். இந்தப் பாரம்பரிய நிகழ்ச்சியைப் பெண்கள் ஆா்வத்துடன் பாா்த்து ரசித்தனா். தொடா்ந்து அங்கிருந்த சாணத்தை எடுத்து விவசாய நிலங்களில் உரமாகப் போட்டனா்.

இந்நிகழ்ச்சிக்குப் பிறகு பக்தா்கள் அனைவரும் குளத்தில் நீராடிவிட்டு பீரேஸ்வரரை வழிபட்டனா். கரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கையாக 100 போ் மட்டுமே பங்கேற்க வருவாய்த் துறையினா் அனுமதி அளித்தனா். ஆனால், கரோனா அச்சமின்றி சாணியடித் திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

சாணம் கிருமி நாசினி என்றும், கரோனா நோய்த் தொற்று பரவாது என்றும் கோயில் நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த விழாவில் ஆண்டுதோறும் கா்நாடக பக்தா்கள் பங்கேற்பா். இந்த ஆண்டு கா்நாடக பக்தா்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் குறைந்த அளவு பக்தா்கள் மட்டுமே வந்தனா்.ய

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com