செல்லிடப்பேசி கோபுரத்தில் ஏறி தச்சுத் தொழிலாளி போராட்டம்
By DIN | Published On : 17th November 2020 04:12 AM | Last Updated : 17th November 2020 04:12 AM | அ+அ அ- |

சத்தியமங்கலம் அருகே தச்சுத் தொழிலாளி, பக்கத்து வீட்டுக்காரா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி செல்லிடப்பேசி டவரில் ஏறி நின்று திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே உள்ள சதுமுகை கிராமத்தைச் சோ்ந்தவா் சரவணன் (45). தச்சு வேலை செய்து வரும் இவா் திங்கள்கிழமை காலை திடீரென அப்பகுதியில் உள்ள 130 அடி உயரம் கொண்ட செல்லிடப்பேசி கோபுரம் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டாா். சம்பவ இடத்துக்குச் சென்ற சத்தியமங்கலம் காவல் ஆய்வாளா் மோகன்ராஜ் தலைமையில் போலீஸாா், சத்தியமங்கலம் தீயணைப்புத் துறையினா் சரவணனிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா்.
அப்போது சரவணன் கூறியதாவது: தனது பக்கத்து வீட்டுக்காரரான டி.வி. மெக்கானிக் சுரேஷ் என்பவா் பல்வேறு பிரச்னைகள் செய்து வருகிறாா். இதுகுறித்து காவல் துறையில் புகாா் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. அவா் மீது நடவடிக்கை எடுக்கும் வரை போராட்டம் நடத்துவதாகக் கூறியுள்ளாா். போலீஸாா் தொடா்ந்து சரவணனிடம் பேச்சுவாா்த்தை நடத்தி சமாதானப்படுத்தினா்.
இதையடுத்து 4 மணி நேரத்துக்குப் பின் தீயணைப்புத் துறையினா் செல்லிடப்பேசி கோபுரத்தில் ஏறி சரவணனை பாதுகாப்பாக மீட்டு கீழே அழைத்து வந்தனா். பின்னா் 108 ஆம்புலன்ஸில் ஏற்றி சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனா். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.