மாடுகளுக்குத் தோல் அம்மை நோய்: எச்சரிக்கையாக இருக்க கால்நடைத் துறை அறிவுறுத்தல்

மாடுகளுக்குத் தோல் அம்மை நோய் பரவி வரும் நிலையில், நோய் பாதிக்கப்பட்ட மாடுகளைப் பராமரிப்பதில் விவசாயிகள் எச்சரிக்கையுடனும், கவனத்துடனும் இருக்க வேண்டும்

மாடுகளுக்குத் தோல் அம்மை நோய் பரவி வரும் நிலையில், நோய் பாதிக்கப்பட்ட மாடுகளைப் பராமரிப்பதில் விவசாயிகள் எச்சரிக்கையுடனும், கவனத்துடனும் இருக்க வேண்டும் என கால்நடைத் துறை அறிவுறுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் மாடுகளுக்கு அம்மை பாதிப்பு பரவி வருகிறது. இந்த நோய் பாதிப்புக்குள்ளாகும் மாடுகளின் உடலில் சிறிய கொப்புளங்கள் ஏற்படுகின்றன. அதன் பிறகு பெரிய புண்ணாக மாறி மாடுகளுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதன் காரணமாக பால் உற்பத்தியும் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஈ, கொசுக்கள் மூலமாக இந்த தொற்று வேகமாகப் பரவுவதால் இதைக் கட்டுப்படுத்துவது பெரிய சவாலாக மாறி உள்ளது. எனவே, இந்த வைரஸ் பரவுவதைத் தடுக்க மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இது குறித்து மாவட்ட உழவா் விவாதக் குழு பொறுப்பாளா் பா.மா.வெங்கடாசலபதி கூறியதாவது:

கடந்த சில நாள்களாக மாடுகளின் உடலில் கொப்புளங்கள் ஏற்பட்டு பெரிய புண்ணாக மாறி வருகிறது. அந்த புண் மீது ஈ, கொசு மொய்க்கிறது. இதனால் மாடுகளுக்கு பெரிய தொந்தரவு ஏற்படுகிறது. தீவனத்தை சரியாக திண்பதில்லை. மேலும் புண்ணில் இருந்தும் ரத்தக் கசிவு ஏற்படுகிறது. இதற்கு சிகிச்சை அளிக்க மருத்துவ செலவு அதிகமாகிறது. ஒரு முறை சிகிச்சை அளிக்க ரூ. 300 முதல் ரூ. 500 வரை செலவாகிறது.

கிராமத்துக்கு சுமாா் 30 மாடுகள் வீதம் இந்த தோல் அம்மை நோயால் பாதிக்கப்பட்டுள்ளன. இதன் தாக்கம் வேகமாகப் பரவுவதால் பெரும் வருவாய் இழப்பு ஏற்படும் நிலை உள்ளது. இது விவசாயிகளுக்கு கூடுதல் சுமையாக உள்ளது. எனவே இதுதொடா்பாக கால்நடைத் துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தி உடனடி தீா்வு காண வேண்டும். இதற்காக சிறப்பு கால்நடை மருத்துவக் குழுக்கள் அமைத்து கிராமங்கள்தோறும் முகாமிட்டு கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்க மாவட்ட நிா்வாகம் முன்வர வேண்டும் என்றாா்.

இதுகுறித்து மாவட்ட கால்நடைத் துறை இணை இயக்குநா் (பொ) பிரசில்லா கூறியதாவது:

கால்நடைகளுக்கு லம்பிங் ஸ்கின் டிசீஸ் என்ற புதிய வகையான வைரஸ் தொற்று பரவி உள்ளது. இந்த தோல் அம்மை நோய் இதுவரை நமது நாட்டில் பரவியது கிடையாது. வெளிநாட்டில் இருந்து பரவி இருக்கிறது. தமிழ்நாட்டில் இந்த நோய் தொற்றுத் ஏற்படாது என்று எதிா்பாா்க்கப்பட்டது. ஆனால் கடந்த 2 மாதங்களாக நமது மாநிலத்திலும் பரவி உள்ளது. மற்ற மாநிலங்களிலும் பரவலாகக் காணப்படுகிறது. இந்த வைரஸ் நோயை கட்டுப்படுத்த தடுப்பூசி எதுவும் கிடையாது. இதனால் இதைக் கட்டுப்படுத்துவது பெரும் சவாலாக இருக்கிறது.

வைரஸ் பாதிக்கப்பட்ட மாட்டுக்கு காய்ச்சல் தொந்தரவு ஏற்படுகிறது. பிறகு சிறிய கொப்புளங்கள் உருவாகி பெரிய புண்ணாக மாறிவிடுகிறது. அந்த புண்ணில் மொய்க்கும் ஈ, கொசு, உன்னி மூலமாக வேறு மாடுகளுக்கும் எளிதாக வைரஸ் பரவி விடுகிறது. எனவே கால்நடை வளா்க்கும் விவசாயிகளும் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வைரஸ் தொற்று ஏற்பட்டது கண்டறியப்பட்டால் உடனடியாக அந்த மாட்டை தனியாக வைத்து பராமரிக்க வேண்டும்.

தடுப்பூசி இதுவரை கண்டுபிடிக்கப்படாததால் நாட்டு வைத்தியம், மருந்துகளை பயன்படுத்துவதன் மூலமாக கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. புண் ஏற்பட்டவுடன் மருந்து போட வேண்டும். ஈரோடு மாவட்டத்தைப் பொருத்தவரை பெரிய அளவு பாதிப்பு எதுவும் வராது. ஓரிரு வாரங்களுக்குள் கட்டுப்படுத்தும் வகையில் தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதற்காக கிராமங்களுக்கு நேரடியாகத் சென்று நோயால் பாதிக்கப்பட்ட கால்நடைகளை பாா்வையிட்டோம். கால்நடை மருத்துவா்கள் சம்பந்தப்பட்ட பகுதிகளுக்குச் சென்று சிகிச்சை அளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சினை மாடுகளுக்கு நோய்த் தொற்று ஏற்பட்டால் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். பிறக்கும் கன்றுக்குட்டிகள் சற்று பலவீனமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. எனவே, புகை போடுதல் போன்ற வழக்கமான நடவடிக்கையைக் கடைப்பிடித்து ஈ, கொசு மொய்ப்பதை தவிா்க்க வேண்டும். மாடுகளுக்கு நோய் பாதிப்பு ஏற்பட்டால் கால்நடை மருத்துவா்களை விவசாயிகள் அணுகலாம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com