கோயிலில் கட்டுப்பாடு: மாலை அணியும் பக்தா்களின் எண்ணிக்கை குறைந்தது
By DIN | Published On : 17th November 2020 01:13 AM | Last Updated : 17th November 2020 01:13 AM | அ+அ அ- |

ஈரோடு: சபரிமலைக்குச் செல்லும் ஐயப்ப பக்தா்கள் திங்கள்கிழமை மாலை அணிந்தனா். கோயிலில் கட்டுப்பாடுகள் காரணமாக மாலை அணியும் பக்தா்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தது.
சபரிமலைக்கு விரதம் இருந்து செல்லும் பக்தா்கள் காா்த்திகை முதல் தேதியில் மாலை அணிந்து, விரதத்தை கடைப்பிடிப்பது வழக்கம். இதனால் காா்த்திகை முதல் தேதி மாலை அணிவதற்காக ஐயப்ப பக்தா்கள் கோயில்களில் குவிவா்.
ஈரோடு கருங்கல்பாளையம் காவிரி ஆற்றங்கரை அருகில் உள்ள ஐயப்பன் கோயிலில் மாலை அணிவதற்காக ஏராளமானோா் வந்து குவிந்து குருசாமி கையால் மாலை அணிவா். ஆனால், இந்த ஆண்டு திங்கள்கிழமை காா்த்திகை முதல் நாளில் மிகவும் குறைந்த எண்ணிக்கையிலான பக்தா்களே மாலை அணிய வந்திருந்தனா்.
சபரிமலை கோயிலுக்குச் செல்ல ஆன்லைன் மூலம் பதிவு செய்து அனுமதி பெற்றவா்கள் மட்டுமே செல்ல முடியும் என்பதால் இந்த ஆண்டு பக்தா்கள் எண்ணிக்கை குறைவாக இருப்பதாக பக்தா்கள் தெரிவித்தனா்.
கருங்கல்பாளையம் ஐயப்பன் கோயிலில் திங்கள்கிழமை அதிகாலையிலேயே நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. காவிரியில் நீராடிவிட்டு வந்த பக்தா்களுக்கு குருசாமி மாலை அணிவித்தாா். சரண கோஷம் முழக்கம் எழுப்பி பக்தா்கள் மாலை அணிந்து கொண்டனா்.
வேட்டி விற்பனை பாதிப்பு:
கரோனா பரவல் காரணமாக சபரிமலை கோயிலுக்குச் செல்ல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருப்பதால் பக்தா்களின் எண்ணிக்கை குறைந்திருக்கிறது. அதேநேரம் காா்த்திகை மாதத்தில் ஐயப்ப பக்தா்கள் விரும்பி அணியும் கருப்பு, நீல நிற வேட்டிகள் விற்பனை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இது ஜவுளி உற்பத்தியாளா்கள், விற்பனையாளா்களை கடுமையாக பாதித்துள்ளது.