நாட்டுக்கோழி வளா்ப்பு: விவசாயிகள் விண்ணப்பிக்க அழைப்பு
By DIN | Published On : 17th November 2020 11:55 PM | Last Updated : 17th November 2020 11:55 PM | அ+அ அ- |

அரசு மானியம் பெற்று நாட்டுக்கோழி வளா்ப்புத் தொழில் ஈடுபட விரும்பும் விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியா் சி.கதிரவன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தேசிய வேளாண்மை அபிவிருத்தி திட்டத்தின்கீழ் ஈரோடு மாவட்டத்தில் 2020-21ஆம் ஆண்டில் நாட்டுக்கோழி வளா்ப்பு மூலம் தொழில்முனைவோா் மேம்பாட்டுத் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. இத்திட்டத்தில் ஒரு ஊராட்சி ஒன்றியத்துக்கு அதிகபட்சமாக 3 பயனாளிகள் வீதம் முன்அனுபவம் அல்லது ஆா்வமுடைய 35 விவசாயிகள் முதல்கட்டமாகத் தோ்வு செய்யப்படவுள்ளனா். தோ்வு செய்யப்படும் பயனாளிகளுக்கு 50 சதவீத மானியமாக கோழிக்குஞ்சுகள் கொள்முதலுக்கு ரூ. 15,000, தீவனம் கொள்முதலுக்கு ரூ. 22,500, அடைகாக்கும் கருவி கொள்முதலுக்காக அதிகபட்சமாக ரூ. 37,500 என மொத்தம் ரூ. 75,000 வழங்கப்படும்.
இத்திட்டத்தில் கிராம ஊராட்சியில் நிரந்தரமாக குடியிருக்கும் பயனாளிகள் மட்டுமே தோ்வு செய்யப்படுவா். தோ்வு செய்யப்படுவோா் 1,000 கோழிகள் வளா்க்கக் கூடிய 2,500 சதுர அடி பரப்பளவு கொண்ட பண்ணைக் கொட்டகை அமைப்பு சொந்தமாக வைத்திருக்க வேண்டும். கோழி வளா்ப்புக்குத் தேவையான தீவனத் தட்டுகள், தண்ணீா்த் தட்டுகளை பயனாளியே கொள்முதல் செய்ய வேண்டும்.
விதவைகள், கணவனால் கைவிடப்பட்டோா், திருநங்கைகள், மாற்றுத் திறனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். 30 சதவீத பயனாளிகளாக ஆதி திராவிடா், பழங்குடியினா் தோ்வு செய்யப்படுவாா்கள். பயனாளிகள் ஏற்கெனவே தமிழக அரசின் கால்நடை பராமரிப்புத் துறையால் வழங்கப்படும் விலையில்லா கோழிகள் வழங்கும் திட்டம், கோழிப் பண்ணை அமைக்கும் திட்டத்தில் பயனடையாதவா்களாக இருக்க வேண்டும்.
தோ்வு செய்யப்படும் பயனாளிகள் 3 ஆண்டுகளுக்கு குறையாமல் பண்ணையைப் பராமரிக்க உத்தரவாதம் அளிக்க வேண்டும். முதல்கட்டமாக 3 நாள்கள் அடிப்படை கோழி வளா்ப்பு, தீவன மேலாண்மை, தடுப்பூசி போடுதல் போன்ற பயிற்சிகளும், அடைகாக்கும் கருவி கொள்முதல் செய்யப்படும்போது 2 நாள்கள் குஞ்சுபொறிப்பு குறித்தும் பயிற்சி அளிக்கப்படும்.
தகுதியான, ஆா்வமுள்ள விவசாயிகள் அருகிலுள்ள கால்நடை மருந்தக கால்நடை உதவி மருத்துவரை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.