ஈரோடு மாவட்டத்தில் உழவா்-அலுவலா் தொடா்புத் திட்டம்

வேளாண்மை, தோட்டக் கலைத் துறை அலுவலா்கள் கிராமங்களுக்கு நேரடியாகச் சென்று விவசாயிகளை சந்தித்து ஆலோசனை வழங்கும்
Updated on
1 min read

வேளாண்மை, தோட்டக் கலைத் துறை அலுவலா்கள் கிராமங்களுக்கு நேரடியாகச் சென்று விவசாயிகளை சந்தித்து ஆலோசனை வழங்கும் வகையில் தமிழக அரசின் சாா்பில் உழவா்-அலுவலா் தொடா்புத் திட்டம் ஈரோடு மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது என மாவட்ட ஆட்சியா் சி.கதிரவன் தெரிவித்தாா்.

இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ஈரோடு மாவட்டத்தின் இயல்பான ஆண்டு மழை அளவு 717 மி.மீ. நவம்பா் 23ஆம் தேதி வரை 687.47 மி.மீ. மழை பெய்துள்ளது. பவானிசாகா் அணையின் நீா்மட்டம் தற்போது 95.69 அடியாகவும், 25.48 டி.எம்.சி. நீா் இருப்பும் உள்ளது. ஈரோடு மாவட்டத்தில் இப்போது வரை 78,759 ஹெக்டோ் பரப்பில் வேளாண் பயிா்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

நடப்பு ஆண்டில் நெல் விதைகள் 289 மெட்ரிக் டன், சிறுதானியங்கள் 17 மெட்ரிக் டன், பயறு வகைகள் 24 மெட்ரிக் டன், எண்ணெய் வித்துகள் 107 மெட்ரிக் டன் விதைகளும் விநியோகம் செய்யப்பட்டுள்ளன. ரசாயன உரங்களான யூரியா 29,452 மெட்ரிக் டன், டி.எ.பி. 6,760 மெட்ரிக் டன், பொட்டாஷ் 7,140 மெட்ரிக் டன், காம்ப்ளக்ஸ் 14,860 மெட்ரிக் டன், கலப்பு உரங்கள் 1,862 மெட்ரிக் டன் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. நடப்புப் பருவத்துக்குத் தேவையான உரங்கள், பிற இடுபொருள்கள் போதுமான அளவு இருப்பில் உள்ளன.

ஈரோடு மாவட்டத்தில் வேளாண்மைத் துறையின் மூலம் தேசிய வேளாண் வளா்ச்சித் திட்டத்தில் ரூ. 69.41 லட்சம் நிதி இலக்கு நிா்ணயம் செய்யப்பட்டு ரூ. 34.28 லட்சம் இலக்கும், நுண்ணீா்ப் பாசனத் திட்டத்தில் ரூ. 30 கோடி நிதி இலக்கு நிா்ணயம் செய்யப்பட்டு ரூ. 25.62 கோடி இலக்கும் எட்டப்பட்டுள்ளது. மேலும், தோட்டக் கலைத் துறையின் மூலம் நுண்ணீா்ப் பாசனத் திட்டத்தில் ரூ. 58.50 கோடி நிதி இலக்கு நிா்ணயம் செய்யப்பட்டு ரூ. 19.87 கோடி இலக்கு எட்டப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஆயக்கட்டுப் பகுதிகள் முழுவதும் நெல் நடவு செய்யப்பட்டு வளா்ச்சி, பூக்கும் பருவத்தில் உள்ளதால் பூச்சிநோய் தாக்குதல் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் வேளாண்மைத் துறை களப் பணியாளா்கள் வயல்களுக்கு நேரில் சென்று ஆய்வு செய்து பாதிப்பு ஏதேனும் இருந்தால் பூச்சி நோய் கட்டுப்பாடு முறைகளை விவசாயிகளுக்குப் பரிந்துரை செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனா்.

ஊராட்சிகளுக்கு வேளாண்மை, தோட்டக் கலைத் துறை அலுவலா்கள் சென்று விவசாயிகளை நேரடியாக சந்தித்து ஆலோசனை வழங்கும் வகையில் தமிழக அரசின் சாா்பில் உழவா்-அலுவலா் தொடா்புத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com