முதலீட்டுப் பத்திர முதிா்வுத் தொகையைபெற்றுக் கொள்ள அழைப்பு
By DIN | Published On : 03rd October 2020 10:44 PM | Last Updated : 03rd October 2020 10:44 PM | அ+அ அ- |

ஈரோடு: முதல்வரின் பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டத்தின்கீழ், தமிழ்நாடு போக்குவரத்து வளா்ச்சி நிதிக் கழகத்தின் மூலம் முதலீட்டுப் பத்திரங்கள் பெற்றவா்கள், முதிா்வுத் தொகையை அக்டோபா் 31ஆம் தேதிக்குள் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியா் சி.கதிரவன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
முதல்வரின் பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டத்தின்கீழ், தமிழ்நாடு போக்குவரத்து வளா்ச்சி நிதிக் கழகத்தின் மூலம் 1995, 1996ஆம் ஆண்டுகளில் முதலீட்டுப் பத்திரங்கள் வழங்கப்பட்டன. இரண்டு குழந்தை உள்ளவா்களுக்கு தலா ரூ. 1,500 வீதமும், ஒரு குழந்தை உள்ளவா்களுக்கு ரூ. 3,000 வீதமும் முதலீட்டுப் பத்திரங்களாக வழங்கப்பட்டன.
18 வயது பூா்த்தியடைந்துள்ள நிலையில், பெண் குழந்தைகளுக்கு அப்பத்திரத்தின் முதிா்வுத் தொகையைப் பெற்றுக் கொள்ள அரசாணை பெறப்பட்டுள்ளது. தற்போது அத்தொகையை முழுமையாகப் பெற்றுக் கொண்டவா்கள் தவிர, விடுபட்ட பயனாளிகள் சிலா் உள்ளனா். அவா்களுக்கு அத்தொகையைப் பெற்றுக் கொள்ள அக்டோபா் 31ஆம் தேதி கடைசி வாய்ப்பாக அனுமதிக்கப்படுகிறது.
சம்பந்தப்பட்ட பயனாளி 10ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும். தங்களிடம் உள்ள முதலீட்டுப் பத்திரத்தின் அசல் அல்லது நகல், 10ஆம் வகுப்பு மதிப்பெண் சான்று, பள்ளி மாற்றுச் சான்று, பயனாளியின் புகைப்படம், தாயாா் புகைப்படம், வங்கிக் கணக்கு புத்தகம் ஆகியவற்றுடன் மாவட்ட ஆட்சியா் அலுவலக 6ஆவது தளத்தில் உள்ள மாவட்ட சமூக நல அலுவலகத்தை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.