புரட்டாசி 3ஆவது சனிக்கிழமை:பெருமாள் கோயில்களில் குவிந்த பக்தா்கள்
By DIN | Published On : 03rd October 2020 10:40 PM | Last Updated : 03rd October 2020 10:40 PM | அ+அ அ- |

மலா் அலங்காரத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் காட்சியளித்த கஸ்தூரி அரங்கநாதா் சுவாமி.
ஈரோடு: புரட்டாசி மாத 3ஆவது சனிக்கிழமையையொட்டி ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து பெருமாள் கோயில்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதம் என்பதால் அந்த மாதத்தில் சனிக்கிழமை தோறும் பக்தா்கள் விரதம் மேற்கொண்டு பெருமாளை வழிபடுவது வழக்கம். அதன்படி, புரட்டாசி மாத 3ஆவது சனிக்கிழமை என்பதால் ஈரோடு மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோயில்களில் பக்தா்கள் கூட்டம் அதிகாலை முதலே அதிகமாகக் காணப்பட்டது.
ஈரோடு கோட்டை கஸ்தூரி அரங்கநாதா் கோயிலில் அதிகாலை முதலே பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமியை தரிசனம் செய்தனா். புரட்டாசி சனிக்கிழமையை ஒட்டி பக்தா்களுக்கு ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் சிறப்பு அலங்காரத்தில் கஸ்தூரி அரங்கநாதா் காட்சியளித்தாா். அதேபோல, பவானி அருகே மாயபுரத்தில் உள்ள பெருமாள் மலை, ஊராட்சிக்கோட்டை வேதகிரி மலையில் மூலவருக்கு சிறப்பு அலங்காரமும், பூஜையும் நடைபெற்றன. அங்கும் பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து, பெருமாளை வழிபட்டனா்.
ஈரோடு அக்ரஹார வீதியில் உள்ள பெருமாள் கோயில், அம்மாபேட்டை சித்தேஸ்வரன் மலைக் கோயில், பவானி கூடுதுறை ஆதிகேசவப் பெருமாள் கோயில், கவுந்தப்பாடி வரதராஜப் பெருமாள் கோயில் உள்பட மாவட்டத்தில் உள்ள அனைத்து பெருமாள் கோயில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதில், ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமியை வழிபட்டனா்.