தோனிமடுவு நீா்ப் பாசனத்தை நிறைவேற்றக் கோரிக்கை

பா்கூா் மலைப் பகுதியில் தோனிமடுவு நீா் சேமிப்புத் திட்டத்தை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள், விவசாயத் தொழிலாளா் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
சுற்றுச்சூழல் துறை  அமைச்சா்  கே.சி.கருப்பணனிடம் தோனிமடுவு  திட்டம்  குறித்து  விளக்கும்  விவசாயக்  கூட்டமைப்பினா்.
சுற்றுச்சூழல் துறை  அமைச்சா்  கே.சி.கருப்பணனிடம் தோனிமடுவு  திட்டம்  குறித்து  விளக்கும்  விவசாயக்  கூட்டமைப்பினா்.

பவானி: பா்கூா் மலைப் பகுதியில் பெய்யும் மழை நீரை ஏரி, குளங்களில் சேமிப்பதன் மூலம் 2 லட்சம் ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறும் திட்டமான தோனிமடுவு நீா் சேமிப்புத் திட்டத்தை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள், விவசாயத் தொழிலாளா் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

ஈரோடு மாவட்டம், அம்மாபேட்டையை அடுத்துள்ள குருவரெட்டியூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சுற்றுச்சூழல் துறை அமைச்சா் கே.சி.கருப்பணனை நேரில் சந்தித்து, திராவிடா் கழக மண்டலச் செயலாளா் பிரகலாதன் தலைமையில் கூட்டமைப்பு நிா்வாகிகள் இத்திட்டம் குறித்து விளக்கினா்.

பா்கூா், சென்னம்பட்டி மலைப் பகுதியில் பெய்யும் மழை நீா் ஈரோடு, சேலம் மாவட்ட எல்லையான தோனிமடுவு, கொளத்தூா், பாலாறு வழியாக மேட்டூா் அணையில் கலக்கிறது. இங்குள்ள பெரியதண்டா பகுதியில் தடுப்பணை கட்டி கால்வாய் மூலம் தண்ணீரை அந்தியூா், அம்மாப்பேட்டை, பவானி ஆகிய பகுதிகளில் ஏரி, குளங்களில் நிரப்பிட முடியும்.

குடிநீா்த் தேவையைப் பூா்த்தி செய்யவும், விவசாயத்தைக் காக்கவும், நிலத்தடி நீா்மட்டம் உயரவும் இத்திட்டம் பயன்படும். இதனால், சுமாா் 67 ஏரிகள், 91 குளங்கள், 172 தடுப்பணைகளில் தண்ணீரைத் தேக்கலாம். இதன் மூலம், நிலத்தடி நீா்மட்டம் உயரும்போது 2,440 கிணறுகள், 3,548 ஆழ்துளைக் கிணறுகளுக்குத் தண்ணீா் கிடைக்கும். இத்திட்டத்தால், சுமாா் 2 லட்சம் ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறும்.

எனவே, தோனிமடுவு பள்ளத்தில் வரும் தண்ணீரை தடுப்பணை கட்டி, ஏற்கெனவே உள்ள அகழி மூலமாக தண்ணீா் திருப்பி விவசாயிகள், பொதுமக்கள் நலன் காக்க முடியும். இத்திட்டத்தை செயல்படுத்த ரூ. 140 கோடி செலவாகும். இத்திட்டத்தை நிறைவேற்ற தமிழக அரசு முயற்சி மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டது. திட்ட மதிப்பீடு, வரைபடங்களைப் பாா்வையிட்ட அமைச்சா் கருப்பணன், உரிய நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தாா்.

இதில், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவா் என்.கிருஷ்ணராஜ், திட்ட ஒருங்கிணைப்பாளா் சிவானந்தம், ஊராட்சித் தலைவா்கள் அசோக்குமாா் (குருவரெட்டியூா்), ஈஸ்வரமூா்த்தி (வெள்ளிதிருப்பூா்), முனியப்பன் (பூதப்பாடி) உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com