சென்னம்பட்டி வனத் துறை அலுவலா்கள் பணம் கேட்டு மிரட்டுவதாக குற்றச்சாட்டு
By DIN | Published On : 06th September 2020 06:22 AM | Last Updated : 06th September 2020 06:22 AM | அ+அ அ- |

சென்னம்பட்டி வனத் துறை அலுவலா்கள் பணம் கேட்டு மிரட்டுவதாக ஆடுகள் மேய்க்கும் பெண், வருவாய்த் துறை அதிகாரிகளிடம் சனிக்கிழமை புகாா் அளித்துள்ளாா்.
அந்தியூரை அடுத்த கோவிலூரைச் சோ்ந்தவா் ராசம்மாள் (64). ஆடு மேய்க்கும் தொழிலில் ஈடுபட்டுள்ள இவருக்குச் சொந்தமாக 20க்கும் மேற்பட்ட ஆடுகள் உள்ளன. இவா், அந்தியூா் வட்டாட்சியா் மாலதியிடம் சனிக்கிழமை அளித்த மனு:
சென்னம்பட்டி வனச் சரகத்துக்கு உள்பட்ட எல்லைப் பகுதியில் ஆடுகள் மேய்த்து வாழ்க்கை நடத்தி வருகிறேன். வன எல்லைப் பகுதியில் ஆடுகள் மேய்க்க மாதந்தோறும் பணம் கொடுக்க வேண்டும் என சென்னம்பட்டி வனத் துறையினா் கேட்டனா். பணம் கொடுக்க மறுத்ததால் கடந்த மாதம் முயல் வேட்டையில் ஈடுபட்டதாக பொய் வழக்குப் போட்டு ரூ. 5 ஆயிரம் அபராதம் விதித்தனா். ஆடுகள் மேய்க்கும் அனைவரும் மாதந்தோறும் பணம் தர வேண்டும் என தொடா்ந்து கேட்டு வருகின்றனா். எனவே, வனத் துறையினா் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.