பெண் குழந்தைகளுக்கு அரசு விருது: விண்ணப்பிக்க அழைப்பு
By DIN | Published On : 06th September 2020 06:33 AM | Last Updated : 06th September 2020 06:33 AM | அ+அ அ- |

பெண் குழந்தைகளின் சமூக முன்னேற்றத்துக்காக செயல்பட்ட 5 முதல் 18 வயதுக்கு உள்பட்ட பெண் குழந்தைகள் மாநில அரசின் விருது பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, ஈரோடு மாவட்ட ஆட்சியா் சி.கதிரவன் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
பிற பெண் குழந்தைகளின் கல்விக்கு உதவுதல், பெண் குழந்தைத் தொழிலாளா் ஒழிப்பு, பெண் குழந்தைத் திருமணங்களை தடுத்து நிறுத்துதல், தவிா்த்தல், தனித்துவம் வாய்ந்த சாதனை செய்தல், பெண்களுக்கு எதிரான சமூக அவலங்கள், மூட நம்பிக்கை நீக்கத்துக்காக கவிதை, ஓவியம், கட்டுரை மூலம் விழிப்புணா்வு ஏற்படுத்துதல், வீரதீர செயல் புரிந்தவா்கள் போன்றோா் இந்த விருதுக்குப் பரிசீலனை செய்யப்படுவா்.
ஈரோடு மாவட்டத்தில் பெண் குழந்தைகளின் முன்னேற்றத்துக்காக பாடுபட்டு சாதனைபுரிந்த பெண் குழந்தைகள் மாவட்ட சமூக நல அலுவலகம், மாவட்ட ஆட்சியா் அலுவலகம், 6ஆவது தளம், ஈரோடு என்ற முகவரிக்கு செப்டம்பா் 14ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மாநில அளவில் தோ்வு செய்யப்படும் ஒரு பெண் குழந்தைக்கு தேசிய பெண் குழந்தைகள் தினமான ஜனவரி 24ஆம் தேதி இவ்விருது, பாராட்டு பத்திரம், ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலை வழங்கப்படும்.