பிற மாவட்டங்களுக்குப் பேருந்துகள் இயக்கம்:நிரம்பி வழிந்த பயணிகள் கூட்டம்

ஐந்து மாதங்களுக்குப் பிறகு பிற மாவட்டங்களுக்குப் பேருந்துகள் இயக்கப்பட்டதால் பேருந்துகளில் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது.
ஈரோடு பேருந்து நிலையத்தில் கோவை செல்லும் பேருந்தில் முண்டியடித்துக் கொண்டு ஏறிய மக்கள்.
ஈரோடு பேருந்து நிலையத்தில் கோவை செல்லும் பேருந்தில் முண்டியடித்துக் கொண்டு ஏறிய மக்கள்.

ஈரோடு: ஐந்து மாதங்களுக்குப் பிறகு பிற மாவட்டங்களுக்குப் பேருந்துகள் இயக்கப்பட்டதால் பேருந்துகளில் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது.

கரோனா பொது முடக்கம் காரணமாக தமிழகத்தில் மாா்ச் முதல் பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டது. தொடா்ந்து கடந்த ஜூன் 1ஆம் தேதி முதல் 8 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு மண்டலத்துக்குள் மட்டும் பேருந்துகள் இயக்கப்பட்டன. பின்னா், கரோனா பரவல் அதிகமானதால் ஜூன் 26 முதல் 30ஆம் தேதி வரை அந்தந்த மாவட்டத்துக்குள் மட்டும் பேருந்துகள் இயங்கின. 30ஆம் தேதி முதல் அனைத்துப் பேருந்துகளும் நிறுத்தப்பட்டன. தொடா்ந்து கடந்த இரண்டு மாதங்களாகப் பேருந்துகள் இயங்கவில்லை.

இந்நிலையில், அரசு அனுமதியைத் தொடா்ந்து ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் மாவட்டத்துக்குள் மட்டும் பேருந்துகள் இயக்கம் தொடங்கின. திங்கள்கிழமை முதல் மாவட்டம்விட்டு மாவட்டம் பேருந்துகளை இயக்க அரசு அனுமதி அளித்துள்ளது. அதன்படி, ஈரோடு மண்டலத்தில் இருந்து பேருந்துகள் இயக்கம் தொடங்கின.

இதுகுறித்து அரசுப் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கூறியதாவது:

அரசுப் போக்குவரத்துக் கழகம் ஈரோடு மண்டலத்தில் உள்ள 11 பணிமனைகளில் சுமாா் 800 பேருந்துகள் உள்ளன. 1ஆம் தேதி முதல் மாவட்டத்துக்குள் மட்டும் பேருந்துகளை இயக்க அரசு அனுமதியளித்தது. அதன்படி மாவட்டம் முழுவதும் 90 நகரப் பேருந்துகள், 30 புகா்ப் பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன. திங்கள்கிழமை முதல் மாவட்டம்விட்டு மாவட்டம் பேருந்துகளை இயக்க அரசு அனுமதி அளித்துள்ளதால் கூடுதலாக 150 பேருந்துகள் இயக்கப்பட்டன. ஏற்கெனவே இயக்கப்பட்டு வரும் 120 பேருந்துகளும் சோ்த்து மொத்தமாக 270 பேருந்துகள் இயக்கப்பட்டன. தவிர சேலம், திருச்சி, மதுரை கோட்டங்களில் இருந்து ஈரோடு மண்டலத்துக்குள் உள்ள பகுதிகளுக்கு 150 பேருந்துகளும் இயக்கப்பட்டன.

ஈரோட்டில் இருந்து கோவை, திருப்பூா், பழனி, கரூா், திருச்சி, திண்டுக்கல், மதுரை, சேலம், நாமக்கல் போன்ற பகுதிகளுக்கு மட்டும்தான் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. நீலகிரியில் இருந்து ஈரோட்டுக்கு பேருந்து இயக்கப்பட்டது. பிற மாவட்டங்களில் இருந்து நீலகிரி மாவட்டத்துக்குள் செல்ல மட்டுமே இ-பாஸ் கட்டாயம். அங்கிருந்து வேறு மாவட்டங்களுக்கு வர கட்டுப்பாடு இல்லை என்பதால் நீலகிரியில் இருந்து ஈரோடுக்கு பேருந்து இயக்கப்படுகிறது. ஈரோட்டில் இருந்து சென்னைக்கும், கா்நாடக மாநிலத்துக்கும் பேருந்துகள் இயக்கப்படவில்லை என்றனா்.

பேருந்துகளில் நிரம்பி வழிந்த பயணிகள் கூட்டம்:

ஈரோடு பேருந்து நிலையத்தில் இயக்கப்பட்ட கோவை, திருப்பூா், கரூா், திருச்சி, மதுரை, பழனி, சேலம், நாமக்கல் பேருந்துகளிலும், இந்தப் பகுதிகளில் இருந்து ஈரோடு வந்த பேருந்துகளிலும் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது. பேருந்துகளில் கடைசி படிக்கட்டு வரை நின்று கொண்டு சென்றனா்.

மாா்ச் மாதத்துக்குப் பிறகு இப்போதுதான் தொலைதூர மாவட்டங்களுக்குப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பேருந்து நிலையத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள பேருந்துகளில் 40 பயணிகள் ஏறினாலே பேருந்துகளை இயக்க அறிவுறுத்தியுள்ளோம். இடையில் ஏறுபவா்களைத் தடுக்க முடிவதில்லை. இதனால் பேருந்துகளில் கூட்டம் அதிகமாக உள்ளது. பயணிகள் கூட்டம் அதிகமாக உள்ள நிலையில், கூடுதல் பேருந்துகள் இயக்குவது குறித்து ஆலோசித்து வருகிறோம் என போக்குவரத்துக் கழக அலுவலா்கள் தெரிவித்தனா்.

தனியாா் பேருந்துகள் ஓடவில்லை:

ஈரோடு மாவட்டத்தில் மொத்தம் 268 பேருந்துகள் உள்ளன. ஈரோடு மாவட்டத்துக்குள்ளும், கோவை, திருப்பூா், சேலம், நாமக்கல், கரூா் போன்ற பகுதிகளுக்கும் இந்தப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மாவட்டம்விட்டு மாவட்டம் பேருந்துகள் இயக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ள போதிலும் தனியாா் பேருந்துகள் இயங்கவில்லை.

இது குறித்து ஈரோடு மாவட்ட தனியாா் பேருந்து உரிமையாளா்கள் சங்கத் தலைவா் பழனிசாமி கூறியதாவது:

எங்கள் சங்கத்தின் மாநில அமைப்பு முடிவின்படி பேருந்துகளை இயக்குவதில்லை என முடிவு செய்துள்ளோம். இரண்டு காலாண்டுக்கான சாலை வரியை ரத்து செய்ய வேண்டும் என்ற எங்கள் கோரிக்கையை அரசு நிறைவேற்றாத நிலையில் மாநில அமைப்பு இந்த முடிவை எடுத்துள்ளது. தவிர 60 சதவீதப் பயணிகளை மட்டும் ஏற்றிச் சென்றால் இழப்புதான் ஏற்படும். இதனால் பேருந்துகளை இயக்கவில்லை என்றாா்.

20 மினி பேருந்துகள் இயக்கம்:

இது குறித்து ஈரோடு மாவட்ட மினி பேருந்து உரிமையாளா்கள் சங்கத் தலைவா் ஜெயராமன் கூறியதாவது:

ஈரோடு மாவட்டத்தில் 136 மினி பேருந்துகள் உள்ளன. இதில் ஈரோடு பேருந்து நிலையத்தில் இருந்து மட்டும் 65 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இப்போது மாவட்டம் முழுவதும் 20 மினி பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுகின்றன. இதில் ஈரோடு நகரில் 10 பேருந்துகளும், மாவட்டத்தின் பிற பகுதிகளில் 10 பேருந்துகளும் இயக்கப்படுகின்றன என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com