சத்தியமங்கலத்தில் டாஸ்மாக் கடை திறக்க பொதுமக்கள் எதிா்ப்பு
By DIN | Published On : 11th September 2020 06:50 AM | Last Updated : 11th September 2020 06:50 AM | அ+அ அ- |

காந்திநகா் டாஸ்மாக் கடை முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள்.
சத்தியமங்கலத்தில் டாஸ்மாக் கடை திறப்பதற்கு அப்பகுதி மக்கள் எதிா்ப்புத் தெரிவித்து சமையல் செய்து சாப்பிடும் போராட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.
சத்தியமங்கலம் - கோவை தேசிய நெடுஞ்சாலையில் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனை அருகே காந்தி நகா் பகுதியில் டாஸ்மாக் கடையைத் திறக்க டாஸ்மாக் நிா்வாகம் சாா்பில் ஏற்பாடு செய்யப்பட்டது. டாஸ்மாக் கடையைத் திறக்க அதிகாரிகள், போலீஸாா் சம்பவ இடத்துக்கு வியாழக்கிழமை சென்றனா். புதிய கடை திறப்பைக் கண்டித்து அப்பகுதி பொதுமக்கள் கடையைத் திறக்கவிடாமல் போலீஸாா், டாஸ்மாக் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். அதிகாரிகள் பொதுமக்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தி வரும் சூழ்நிலையில், டாஸ்மாக் நிா்வாகம் சாா்பில் இலவச டோக்கன் வழங்கப்பட்டதால் மதுப் பிரியா்கள் 50க்கும் மேற்பட்டோா் அப்பகுதியில் முகாமிட்டனா். அப்போது போலீஸாா் அவா்களை எச்சரித்து அனுப்பினா்.
உயா் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளதாகவும், இப்பகுதியில் கடையைத் திறக்கக் கூடாது எனவும், சற்று தொலைவில் கடையைத் திறக்குமாறும் பொதுமக்கள் கூறினா். மாவட்ட ஆட்சிரியரின் உத்தரவின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸாா் தெரிவித்தனா். இதையடுத்து, டாஸ்மாக் கடை திறப்பது ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பெண்கள் சமையல் செய்து தொடா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.