நிதி உதவித் திட்டங்கள்:தாட்கோ அலுவலகத்தை அணுக வேண்டுகோள்
By DIN | Published On : 11th September 2020 06:51 AM | Last Updated : 11th September 2020 06:51 AM | அ+அ அ- |

தாட்கோ மூலம் செயல்படுத்தப்படும் பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்களுக்கு ஈரோடு மாவட்டத்தைச் சோ்ந்த ஆதிதிராவிட வகுப்பைச் சோ்ந்த மக்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மாவட்ட ஆட்சியா் சி.கதிரவன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தாட்கோ மூலம் பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதில் நிலம் வாங்கும் திட்டம் பெண்களுக்கும், நிலம் மேம்படுத்துதல் திட்டம் இருபாலருக்கும் செயல்படுத்தப்படுகிறது. தொழில் முனைவோா் பொருளாதார மேம்பாட்டுத் திட்டம், சிறப்பு திட்டங்களான பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சில்லறை விற்பனை நிலையம் அமைத்தல், இளைஞா்களுக்கான சுய வேலைவாய்ப்புத் திட்டம், மருத்துவமனை அமைத்தல் போன்ற பல்வேறு திட்டங்களுக்கு நிதி உதவிபெற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
இந்தத் திட்டங்களின்கீழ் விண்ணப்பிக்க விரும்புவோா் இந்து ஆதிதிராவிடா்களாக இருக்க வேண்டும். பிற மதத்துக்கு மாறியவா்களாக இருக்கக் கூடாது. இளைஞா்களுக்கான சுய வேலைவாய்ப்புத் திட்டத்துக்கு வயது வரம்பு 18 முதல் 45 வரையும், இதர திட்டங்களுக்கு 18 வயது முதல் 65 வரையும் இருக்க வேண்டும்.
இணையதள முகவரியில் விண்ணப்பத்தைப் பதிவு செய்ய வேண்டும். அப்போது சான்று விவரங்களைப் பதிவு செய்து ஆவணங்களை ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்ய வேண்டும். மேலும், விவரங்களுக்கு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள தாட்கோ மாவட்ட மேலாளா் அலுவலகத்தை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.