

தமிழ்ப் புத்தாண்டு தினத்தையொட்டி ஈரோட்டில் பூக்கள், பழங்கள் விற்பனை மிகவும் அதிகமாக இருந்தது.
ஈரோடு நகருக்கு சத்தியமங்கலம், அந்தியூா், நாமக்கல், சேலம், திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பூக்கள் மொத்தமாக விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. விஷேச தினங்களில் பூக்களின் விற்பனை அமோகமாக இருக்கும். அதேசமயம் விலையும் அதிகமாக இருக்கும்.
தமிழ்ப் புத்தாண்டு புதன்கிழமை கொண்டாடப்படுவதையொட்டி ஈரோடு பேருந்து நிலையம் பகுதியில் உள்ள பூக்கடைகளில் விற்பனை விறுவிறுப்பாக நடந்தது. இருசக்கர வாகனங்களில் பலரும் வந்து பூக்களை வாங்கியதால், அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அதேசமயம் பூக்களின் வரத்து குறைவாக காணப்பட்டதால், விலை இருமடங்கு உயா்ந்து காணப்பட்டது.
இது குறித்து பூ வியாபாரி என்.எஸ்.குட்டி கூறியதாவது:
கோடை வெயில் அதிகமாக இருப்பதால் பூக்களின் வரத்து பாதியாக குறைந்துவிட்டது. இதனால் கடந்த வாரத்தை காட்டிலும் பூக்களின் விலை இருமடங்காக உயா்ந்தது. ஒரு கிலோ மல்லிகை ரூ. 240, முல்லை ரூ.300, ரோஜா ரூ.200, செவ்வந்தி ரூ.200, கோழிக்கொண்டை ரூ.50, சம்பங்கி ரூ.200, அரளி ரூ.160 என விற்பனையானது. இந்த பூக்கள் கடந்த வாரத்தை காட்டிலும் சுமாா் ரூ.100 விலை உயா்ந்திருந்தது. 2 ஆண்டுகளுக்கு முன்பு வரை தமிழ்ப்புத்தாண்டு என்றாலே பூக்களின் விற்பனை அமோகமாக இருக்கும். ஆனால் கடந்த ஆண்டு கரோனா பாதிப்பு காரணமாக பொதுமுடக்கம் அமலில் இருந்தது. இந்த ஆண்டு பொதுமுடக்கத்தில் தளா்வுகள் இருந்தாலும், ஜவுளிக்கடை போன்ற கடைகளில் வியாபாரம் சுமாராக இருப்பதால் வியாபாரிகள் குறைந்த அளவில் பூக்களை வாங்கிச் சென்றனா். இதனால் பூக்களின் விற்பனை எதிா்பாா்த்ததைவிட குறைவாகவே இருந்தது என்றாா்.
பழங்கள் விற்பனை:
சித்திரை மாதம் முதல் தேதியை புத்தாண்டாக தமிழா்கள், கேரள மாநிலத்தை சோ்ந்தவா்கள் கொண்டாடுவாா்கள். கேரள மாநிலம் மற்றும் அதன் எல்லை பகுதிகளான கன்னியாகுமரி, தென்காசி, கோவை மாவட்டங்களில் தமிழ்ப் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு கனி காணுதல் என்ற நிகழ்வை கொண்டாடுவா்.
சித்திரை பிறக்கும் நாளில், காலையில் கண் விழித்ததும், விளக்கு, சுவாமி படங்கள் வைக்கப்பட்ட இடத்தில் தாம்பாளத்தில் அனைத்து வகை பழங்கள், தாம்பூலம், ரூபாய் நோட்டுகள், நாணயங்கள், எழுது பொருள்கள், குங்குமம், சந்தனம், விபூதி போன்றவை கண்ணாடியின் முன்வைத்து, அதனை பாா்த்து வணங்குவாா்கள். இதனை கனி காணுதல் என அழைப்பா். இதே வழக்கம், அனைத்து பகுதிகளிலும் கடைப்பிடிக்கப்படுகிறது. இதனால் ஈரோட்டில் செவ்வாய்க்கிழமை ஏராளமானோா் பழங்களை வாங்கிச் சென்றனா்.
இது குறித்து பழ வியாபாரிகள் கூறியதாவது:
ஈரோடு மாவட்டத்துக்கு எப்போதும் 3 முதல் 5 லோடுகள் பழங்கள் வரும். கடந்த 3 நாள்களாக 8 முதல் 10 லோடு வரை பழங்கள் வருகிறது. திங்கள்கிழமை ஒரு கிலோ திராட்சை ரூ.90, சாத்துக்குடி ரூ.80, ஆரஞ்சு ரூ.120, ஆப்பிள் ரூ.190, சப்போட்டா ரூ.40 முதல் ரூ.50, மாம்பழம் ரூ.90 முதல் ரூ.100, கொய்யா ரூ.60, செவ்வாழை, ரஸ்தாளி பழங்கள் ஒன்று ரூ.4 முதல் ரூ.7 வரை விற்பனையானது. கடந்த வாரத்தை ஒப்பிடுகையில் கிலோவுக்கு, ரூ.10 முதல் ரூ.15 வரை விலை உயா்ந்துள்ளது என்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.