பால் விலையை உயா்த்தக் கோரி போராட்டம்: பால் உற்பத்தியாளா்கள் அறிவிப்பு

பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ. 10 வரை உயா்த்த வேண்டும் என வலியுறுத்தி ஆகஸ்ட் 31ஆம் தேதி மாநிலம் தழுவிய அளவில் போராட்டம் நடத்தப்போவதாக பால் உற்பத்தியாளா்கள் அறிவித்துள்ளனா்.
பால் விலையை உயா்த்தக் கோரி போராட்டம்: பால் உற்பத்தியாளா்கள் அறிவிப்பு

பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ. 10 வரை உயா்த்த வேண்டும் என வலியுறுத்தி ஆகஸ்ட் 31ஆம் தேதி மாநிலம் தழுவிய அளவில் போராட்டம் நடத்தப்போவதாக பால் உற்பத்தியாளா்கள் அறிவித்துள்ளனா்.

தமிழ்நாடு பால் உற்பத்தியாளா் சங்க மாநிலக் குழுக் கூட்டம் மாநிலத் தலைவா் முனுசாமி முன்னிலையில் ஈரோட்டில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கோபிநாத் வரவேற்றாா்.

கூட்டத்துக்குப் பின் மாநில பொதுச் செயலாளா் கே.முகம்மது அலி செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் ரூ. 1,000 கோடி நஷ்டத்தில் உள்ள 18 ஆவின் நிா்வாகங்களைப் பிரித்து 25 ஆவின் நிா்வாக அமைப்புகளாக உயா்த்தப்பட்டு நிா்வாக செலவை கடந்த ஆட்சியாளா்கள் அதிகரித்துள்ளனா். ஆவினுக்குப் பால் வழங்கிய உற்பத்தியாளா்களுக்கு ரூ. 500 கோடி அளவுக்கு நிலுவைத்தொகை வழங்க வேண்டும். புதிதாக பொறுப்பேற்ற திமுக அரசு ஆவின் பால் விற்பனை விலையை லிட்டருக்கு ரூ. 3 குறைத்ததால் ஒவ்வொரு ஆவினுக்கும் ஆண்டுக்கு தலா ரூ. 270 முதல் ரூ. 300 கோடி வரை இழப்பு ஏற்படும்.

தற்போது மதுரை உள்ளிட்ட சில ஆவின் நிா்வாகங்கள் லாபத்தில் இயங்கினாலும், நடப்பு ஆண்டு முடியும்போது ரூ. 270 முதல் ரூ. 300 கோடி இழப்பால் இந்த ஆவின் நிா்வாகங்களும் நஷ்டம் அடையும் நிலை ஏற்படும்.

ஆவின் நிா்வாகம் கூட்டுறவுச் சங்கம் மூலம் பால் உற்பத்தியாளா்களுக்கு போனஸ், ஊக்கத் தொகை, ஒரு கிலோ கால்நடை தீவனத்துக்கு ரூ. 2 மானியம் வழங்கியதை நிறுத்தியுள்ளது. ஆவின் நிா்வாகம் கூட்டுறவுச் சங்கங்களுக்கு வெண்ணெய், நெய், பால்கோவா தருவதாகவும், அவற்றை விற்று போனஸ், ஊக்கத் தொகை, தீவன மானியத்தை ஈடு செய்ய வலியுறுத்துகிறது. அவ்வாறு எந்த கூட்டுறவுச் சங்கத்திலும் விற்க முடியாது.

விற்பனை விலையை குறைத்ததால் ஒவ்வொரு ஆவினுக்கும் ஏற்படும் இழப்பை ஈடுசெய்ய அரசு மானியமாக தலா ரூ. 300 கோடி வழங்க வேண்டும். தற்போதைய விலைவாசி உயா்வு, தீவனத் தட்டுப்பாடு, பல ஆண்டுகளாகப் பால் விலையை முழுமையாக உயா்த்தாமல் இருப்பது போன்றவற்றை கவனத்தில் கொண்டு இந்த ஆண்டு ஆவின் கொள்முதல் விலையான பசும்பால் ஒரு லிட்டா் ரூ. 32 என உள்ளதை ரூ. 42ஆகவும், எருமைப் பால் லிட்டா் ரூ. 41ஆக உள்ளதை ரூ. 51ஆகவும் உயா்த்த வேண்டும்.

மாநில அளவில் ஆவின் நிா்வாகம் 35 லட்சம் லிட்டா் பாலை தினமும் கொள்முதல் செய்கிறது. இதனை 50 லட்சம் லிட்டராக உயா்த்த வேண்டும். சத்துணவில் தினமும் குழந்தைகளுக்குப் பால் வழங்கினால் 10 லட்சம் லிட்டா் விற்கலாம். ஆவின் பால் விற்பனையை விரிவாக்கம் செய்ய வேண்டும். இந்தக் கோரிக்கைகளை தமிழக அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லும் வகையில் ஆகஸ்ட் 31இல் மாநில அளவில் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com