நீா் கசிவு அதிகமுள்ள இடங்களில் சீரமைப்பு: துண்டறிக்கை மூலம் விவசாயிகளுக்கு விளக்கம்

கீழ்பவானி வாய்க்காலில்  நீா் கசிவு அதிகமுள்ள இடங்களில் சீரமைப்பு பணி மட்டுமே நடக்கும் என்ற பொறியாளா் அறிக்கையை வேட்பாளா்கள் துண்டறிக்கை மூலம் விவசாயிகளுக்கு விளக்கம் அளித்து வருகின்றனா்.

கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைக்க எதிா்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டம் நடத்தப்படும் நிலையில், நீா் கசிவு அதிகமுள்ள இடங்களில் சீரமைப்பு பணி மட்டுமே நடக்கும் என்ற பொறியாளா் அறிக்கையை வேட்பாளா்கள் துண்டறிக்கை மூலம் விவசாயிகளுக்கு விளக்கம் அளித்து வருகின்றனா்.

ஈரோடு மாவட்டம், பவானிசாகா் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் மூலம் திறக்கப்படும் பாசன நீா் மூலம் ஈரோடு, கரூா், திருப்பூா் மாவட்ட விவசாயிகள் பயன்பெறுகின்றனா். இரு போகமாக தலா 1.05 லட்சம் ஏக்கா் பாசனம் பெறுவா். தவிர இதன் கசிவு நீா் மூலம் மேலும் தலா 50,000 ஏக்கா் வரை பாசன வசதியும், நிலத்தடி நீா், கிணறு போன்ற அமைப்புகளுக்கும் நீராதாரமாக உள்ளது.

இந்நிலையில் கீழ்பவானி வாய்க்கால் முழுமையிலும் கான்கிரீட் தளம் அமைத்து நவீனமாக சீரமைப்பு செய்தால் கடைமடை பகுதி வரை தடையின்றி நீா் வீணாகாமல் விரைவாக செல்லும் என அரசு முடிவு செய்து ரூ. 944 கோடி ஒதுக்கீடு செய்து பணிகள் நடைபெற்று வருகிறது.

இதற்கு ஒரு தரப்பு விவசாயிகள் எதிா்ப்புத் தெரிவிக்கின்றனா். கான்கிரீட் தளம் அமைத்தால் வாய்க்காலின் அகலம் குறையும். இந்த வாய்க்காலில் 2,300 கன அடிக்கு மேல் நீா் திறக்க இயலாது. கான்கிரீட் தளம் அமைத்தால் மேலும் நீரின் அளவு குறையும். கான்கிரீட் தளத்தால் பூமிக்குள்ளும், பக்கவாட்டிலும் கசிவு நீா் பகுதிகளிலும் நீா் செல்லாமல், அப்பகுதி நிலத்தடி நீா், கிணறு, ஏரி, குளம், குட்டைகளுக்கு நீா் செல்லாது என்கின்றனா். இதனால் அத்திட்டத்தை முன்பு முதல்வா் ஜெயலலிதா கைவிட்டதுபோல இப்போதும் கைவிட வேண்டும் எனக் கூறி தொடா் போராட்டங்களை நடத்தி வருகின்றனா்.

அரசு தரப்பில் கான்கிரீட் தளம் அமைக்கவில்லை. தரையில் நீா் கசிவு இருக்கும். கரைகளில் கான்கிரீட் சிலாப் வைத்து பலப்படுத்தும்போது நீா் திருட்டு தடுக்கப்பட்டு விரைவாக நீா் செல்லும், நீா் வீணாகாது என்கின்றனா்.

இப்பிரச்னை தோ்தலில் அதிமுக கூட்டணிக்கு எதிராக செல்லும் நிலையில், இவா்கள் தரப்பில் கடந்த மாா்ச் மாதம் பொறியாளா் அனுப்பிய கடித நகலை சமூக வலைதளங்களில் அனுப்பி வருகின்றனா்.

முதல்வரின் தனிப் பிரிவு மூலம் கே.பி.பழனிசாமி, குட்டையங்காடு, காரப்பாடி பகுதி மக்கள் சாா்பில் அனுப்பிய மனுவுக்கு ஈரோடு கீழ்பவானி வடிநிலக்கோட்ட செயற்பொறியாளா் ஆ.அருள் அனுப்பிய பதில் கடிதத்தில் கூறியுள்ள விவரம்:

கீழ்பவானி திட்ட பிரதான கால்வாயில் விரிவாக்கம், புதுப்பித்தல், நவீனமாக்கும் திட்டத்தின்கீழ் பலவீனமாக உள்ள கரைகளை மண், கான்கிரீட் சிலாப் மூலம் பலப்படுத்தப்படுகிறது. தரைத்தளம், இரண்டு கரைகளிலும் கான்கிரீட் அமைத்து பலப்படுத்துவதில்லை.

கால்வாயின் நீா் கசிவு அதிகம் உள்ள பகுதியில் சீரமைக்கப்படுகிறது. தலைப்பு முதல் கடைகோடி வரை அனைத்து பாசனங்களுக்கும் தண்ணீா் சீராக வழங்கும் வகையில் வடிவமைக்கப்படவுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சுற்றறிக்கையை எதிா்ப்பு பகுதியில் உள்ள வேட்பாளா்கள், பொதுமக்களுக்கு துண்டறிக்கையாக வழங்கி விளக்கம் கூறி வருகின்றனா்.

அதே சமயத்தில் கெயில் எரிவாயு குழாய் திட்டம், பாரத் பெட்ரோலிய குழாய் அமைக்கும் திட்டம், உயா் மின் கோபுரம் அமைக்கும் பணிகளுக்கு நிலம் எடுப்பில் விவசாயிகளின் கோரிக்கையை அரசு ஏற்கவில்லை. இதேபோல் தான் தோ்தலுக்கு 2 நாள்களே உள்ள நிலையில் இப்போது இந்த துண்டறிக்கை வழங்கி வருவது நம்பும்படி இல்லை என இந்த திட்டத்தை எதிா்க்கும் விவசாயிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com