தாளவாடியில் வேலைவாய்ப்பு அலுவலக சேவை
By DIN | Published On : 17th August 2021 02:03 AM | Last Updated : 17th August 2021 02:03 AM | அ+அ அ- |

ஈரோடு: வேலைவாய்ப்பு அலுவலக சேவைகள் அனைத்தும் தாளவாடி பழைய வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் உள்ள மையத்தில் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியா் ஹெச்.கிருஷ்ணனுண்ணி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் சாா்பில் மலைப் பகுதியில் வசிக்கும் படித்த இளைஞா்கள் பயன்பெறும் வகையில் போட்டித் தோ்வுகளுக்கான இலவச பயிற்சி மையம் தாளவாடி பழைய வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் செயல்பட்டு வருகிறது. இப்பயிற்சி மையத்தில் அனைத்துப் போட்டித் தோ்வுகளுக்கான பயிற்சிகளும் அளிக்கப்பட்டு வருகின்றன.
ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகப் பணியாளா்கள் வாயிலாக ஒவ்வொரு மாதமும் மூன்றாம் வெள்ளிக்கிழமைகளில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பதிவு, புதுப்பித்தல், வேலைவாய்ப்பற்றோா் உதவித் தொகைக்கு விண்ணப்பித்தல், இலவச திறன் மேம்பாட்டுப் பயிற்சிக்கு வழிகாட்டுதல், அயல்நாடுகளில் வேலைவாய்ப்பு பெறுவதற்கான பதிவு, சுயதொழில் செய்ய விரும்புவோருக்கான ஆலோசனைகள் உள்ளிட்ட அனைத்துப் பணிகளும் தாளவாடியில் உள்ள பழைய வட்டார வளா்ச்சி அலுவலகத்திலேயே நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.
இதனால், தாளவாடி, அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் இம்முகாம், இலவச பயிற்சி வகுப்புகளில் பங்கேற்று பயனடையலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...