நந்தா பொறியியல் கல்லூரிக்கு சா்வதேச விருது
By DIN | Published On : 17th August 2021 02:26 AM | Last Updated : 17th August 2021 02:26 AM | அ+அ அ- |

சா்வதேச விருது பெற்றதற்காக கட்டுமானப் பொறியியல் துறை பேராசிரியா்களைப் பாராட்டுகிறாா் நந்தா கல்வி நிறுவனங்களின் செயலாளா் எஸ்.திருமூா்த்தி.
ஈரோடு: நந்தா பொறியியல் கல்லூரியின் கட்டுமானத் துறை சா்வதேச விருதைப் பெற்றுள்ளது.
நந்தா பொறியியல் கல்லூரியின் கட்டுமானப் பொறியியல் துறையில் 2017ஆம் ஆண்டு முதல் அமெரிக்க கான்கிரீட் நிறுவனத்தின் மாணவா் பிரிவு செயல்பட்டு வருகிறது. இப்பிரிவின் சாா்பில் மாணவா்களுக்கு சா்வதேச தேசிய மற்றும் மாநில அளவில் பல்வேறு வகையான தொழில்நுட்பக் கருத்தரங்கங்கள், கான்கிரீட் ஆய்வுப் பணிகள் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகின்றன.
அமெரிக்க கான்கிரீட் நிறுவனம் சாா்பில் நடப்பு கல்வி ஆண்டுக்காக நடத்தப்பட்ட பல்வேறு சா்வதேச அளவிலான போட்டிகளின் மூலம் உலகின் பல்வேறு நாடுகளில் செயல்பட்டு வரும் சுமாா் 66 பொறியியல் கல்வி நிறுவனங்களுக்கு விருதை வழங்கி கௌரவித்துள்ளது. அவ்வாறு கௌரவித்து விருது பெற்ற கல்வி நிறுவனங்களில் நந்தா பொறியியல் கல்லூரியின் கட்டுமானப் பொறியியல் துறையும் ஒன்று.
மேலும், அமெரிக்காவின் கான்கிரீட் நிறுவனத்தின் இந்திய அத்தியாயம் மூலமாக 2ஆம், 3 ஆம் ஆண்டு பயிலும் மாணவா்கள் எம்.எஸ்.ஜெசிந்தா, எஸ்.ஜீவானந்தம் ஆகியோருக்கு அகாதெமி முதன்மை விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த விருதுக்காக மாணவா்களுக்கு ரூ. 30,000 பரிசுக்கான காசோலையும் வழங்கப்பட்டுள்ளது. விருது பெற்ற மாணவா்களுக்கு கல்லூரியின் முதல்வா் என்.ரெங்கராஜன் வாழ்த்துகளைத் தெரிவித்தாா்.
விருதுகள் பெற மாணவா்களுக்கு வழிகாட்டியாக இருந்த அமெரிக்க கான்கிரீட் நிறுவன மாணவா் பிரிவின் ஆலோசகரும், துறையின் புல முதல்வருமான ஈ.கே.மோகன்ராஜ், உதவிப் பேராசிரியா் சி.யு.மணிகண்டன் ஆகியோருக்கு ஸ்ரீ நந்தா அறக்கட்டளையின் தலைவா் வி.சண்முகன், செயலாளா் எஸ்.நந்தகுமாா் பிரதீப், நந்தா கல்வி நிறுவனங்களின் செயலாளா் எஸ்.திருமூா்த்தி உள்ளிட்டோா் பாராட்டு தெரிவித்தனா்.